டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்
பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சிகள் முக்கியத்துவமுடையவையாகும்.
பொருளாதார மாற்றம், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்லுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
இலங்கை தனது மீட்சியைத் தாண்டி நிலையான பேரினப் பொருளாதாரத்தின் அடித்தளத்தின் மீது வேகமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான அபிவிருத்திக் கட்டத்திற்குள் பிரவேசித்து வருகின்றது. இங்கு இந்தியாவை நாம் ஒரு போட்டியாளராகப் பார்க்காமல் நமது முக்கிய பங்காளியாகக் கருத வேண்டும். இரு தரப்பு ஒத்துழைப்பிற்கான வாய்ப்பாக உற்பத்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் எழுச்சி இங்கு அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் 02-05-2026 அன்று நடைபெற்ற ZEE Media WION உலகளாவிய புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சிகள் முக்கியத்துவமுடையவையாகும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இந்தியாவிற்கு எமது ஆதரவைப் பெற்றுத் தருவோம். சட்டச் சீர்திருத்தங்கள், வலுவான தரவுப் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்புக் கட்டமைப்புகள் மற்றும் நாடு முழுவதும் டிஜிட்டல் உள்ளடக்கல் முயற்சிகள் மூலம் 2030 மற்றும் 2035 க்கு இடையில் 30 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான யோசனையை முன்வைக்கின்றேன்.
மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், விநியோகச் சங்கிலி, சுற்றுலா போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, இலங்கையை இந்தியாவின் உற்பத்தி ஆற்றலுக்கு துணைசெய்யும் கேந்திர ஸ்தானமாக நிலைநிறுத்த வேண்டும். இதில் இந்தியாவின் யு.பி.ஐ. கட்டமைப்பை இலங்கையின் கியூ.ஆர். முறைமையுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் தடையற்ற எல்லை கடந்த பரிவர்த்தனைகளை எளிதாக்குவதும், திருகோணமலையை பிராந்திய வலுச்சக்தி ஆற்றல் மையமாக மேம்படுத்தும் திட்டங்களையும் நாம் முன்வைக்கின்றோம்.
இலங்கை அளவு மட்டம் அடிப்படையிலான வளர்ச்சியைத் தாண்டி உயர் மதிப்புமிக்க, நிலையான அனுபவங்களை நோக்கி பயணிக்க வேண்டும். உலகலாவிய ரீதியில் 'மேட் இன் ஸ்ரீலங்கா' நாமத்தை மேம்படுத்த வேண்டும். திறமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு எமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம். பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் அனைத்து குடிமக்களுக்கும் பயன் கிட்ட வேண்டும் என்றார்.





