சுவிஸ் தூதரக ஏற்பாட்டில் தமிழ்த்தரப்புக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டது
இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், எனவே அச்சந்திப்பு பிற்போடப்படக்கூடும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.
இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.
அச்செயலமர்வில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியாராச்சி, நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க ஆகியோரும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழர் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்ம மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் கலந்துகொண்டிருந்தனர்.
அச்செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி (பெடரல்) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெற்றன.
அவ்விஜயத்தைத் தொடர்ந்து அதுபற்றி அதில் பங்கேற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் கேட்டறிந்த இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனையும் சந்தித்து மேற்படி விஜயம் குறித்து விளக்கமளித்திருந்தார்.
இவ்வாறு நிகழ்ந்த சந்திப்புக்களின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தமட்டில் சகல தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம் என்ற விடயம் தமிழ்ப்பிரதிநிதிகளால் தூதுவர் சிறி வோல்ற்றிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் ஒரு கூட்டு சந்திப்பை நடத்துவதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் உடன்பட்டதை அடுத்து, அதனை எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சி தீர்மானிக்கும் பிறிதொருவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் அக்கூட்டணி தீர்மானிக்கும் பிறிதொருவரும் கலந்துகொள்ளவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைத்தது. அதுமாத்திரமன்றி சிவில் சமூகத்தின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனுக்கு அழைப்புவிடுக்கப்படவிருப்பதாகவும் தெரியவந்தது.
இருப்பினும் நேற்று திங்கட்கிழமை (9) கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம், இச்சந்திப்பை ஏற்கனவே தீர்மானித்ததைப்போன்று எதிர்வரும் 19 ஆம் திகதி நடத்துவதில் இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் பிறிதொரு திகதிக்கு பிற்போடுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அறியமுடிகின்றது.
ஏனெனில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு வரைவை அடிப்படையாகக்கொண்டே அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கும் நிலையிலும், ஒற்றையாட்சியின்கீழ் தமிழர்களுக்கான நியாயமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருக்கும் பின்னணியிலும், அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திய கலந்துரையாடல் எனக் குறிப்பிட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிவில் சமூக சந்திப்புக்கான அழைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அதன்படி அவ்வழைப்புக்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் அக்கலந்துரையாடலில் பங்கேற்றமுடியாது என்றும், இருப்பினும் கட்சியிலிருந்து பிரதிநிதியொருவரை அனுப்பிவைப்பதாகவும் கூறியதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
அதேபோன்று மேற்படி அழைப்புக்கு ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் நாகலிங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதிலில், சிவில் சமூகத்தினரின் பங்கேற்புடனான கூட்டத்தை நடத்துவதற்கு முன்பதாக இதுபற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்தித்துக் கலந்துரையாடவேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் 19 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அதற்கு முன்பதாக 15 ஆம் திகதி சிவில் சமூகத்தின் பங்கேற்புடனான ஒரு பொதுக்கூட்டத்தை கஜேந்திரகுமார் தரப்பு ஏற்பாடு செய்யவேண்டியதன் நோக்கம் என்னவென்று சுவிஸ் தூதுவரிடம் கரிசனையை வெளிப்படுத்திய சுமந்திரன், ஆகவே 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டத்தை இரத்துச்செய்யும்படி கோரியதாகத் தெரியவருகின்றது. அதேவேளை இச்சந்திப்பு பிற்போடப்படப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.





