முன்பிணை கோரி ஷிரந்தி ராஜபக்ஷ மனு
ஷிராந்தி ராஜபக்ஷவை விசாரணைகளுக்காக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்திருந்த பின்னணியில், அவர் சிங்கப்பூர் நோக்கிப் பயணம் செய்துள்ளார்.
முன்பிணை கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணிகள் ஊடாக 05-10-2026அன்று அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
'சிரிலிய சவிய' மோசடி விவகாரத்தில் ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எதிராக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, ஷிராந்தி ராஜபக்ஷவை விசாரணைகளுக்காக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்திருந்த பின்னணியில், அவர் சிங்கப்பூர் நோக்கிப் பயணம் செய்துள்ளார்.
இந்த நிலையில், இதுவரை நாடு திரும்பாத அவர் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு பெற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உத்தரவிற்கமைய, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைகளுக்கு ஆஜராவதைத் அவர் தொடர்ந்து தவிர்த்தால், அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெற்று உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தயாராகி வருகிறது.
இந்த நிலையிலேயே, நேற்றைய தினம் (5) தனது சட்டத்தரணிகள் ஊடாக ஷிரந்தி ராஜபக்ஷ மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்பிணை கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பிலான அறிவித்தல், மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மனு தொடர்பாக எதிர்வரும் நாட்களில் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் பரிசீலனைகளை முன்னெடுக்கவுள்ளது.





