எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஏற்படுத்திய பேரழிவு: சர்வதேச தீர்ப்பாயத்தை அமைக்குமாறு சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வலியுறுத்து
இன்றுவரை ஒரு மில்லியன் டொலர் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சூழலியல் பேரழிவுகளுக்கு சர்வதேச தனியார் நிறுவனங்களைப் பொறுப்புகூற வைப்பதற்கும், உள்நாட்டுச் சட்டதிட்டங்களின் எல்லைகளை நிவர்த்தி செய்வதற்கும் சர்வதேச தீர்ப்பாயம் நிறுவப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் இணை நிறுவனரும் சிரேஷ்ட சட்ட ஆலோசகருமான ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ரவீந்திரநாத் தாபரே வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் வளாகத்தில் நடைபெற்ற 'பிரண்ட்ஸ் ஒஃப் தி ஏர்த் இன்டர்நேஷனல்' அமர்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஏற்படுத்திய பேரழிவு குறித்து எங்களது அமைப்பு இலங்கை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தது. 2025 ஜூலை மாதம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்றம், அரசியலமைப்பு மீறல்களைச் சுட்டிக்காட்டி இலங்கை திறைசேரிக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை இழப்பீடாக வழங்குமாறு எக்ஸ்பிரஸ் பேர்ள் நிறுவனங்களின் குழுமத்திற்கு உத்தரவிட்டது. இருப்பினும், இன்றுவரை ஒரு மில்லியன் டொலர் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021 மே மாதம் இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான சிங்கப்பூர் கொடியுடனான 'எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பல் தீப்பற்றி எரி;ந்ததில், நைட்ரிக் அமிலம், காஸ்டிக் சோடா மற்றும் மெதனோல் போன்ற அபாயகரமான இரசாயனங்களுடன் சுமார் 1,680 தொன் பிளாஸ்டிக் துகள்களும் கடலில் கலந்தன.
இதன் காரணமாக ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புகள், பொது சுகாதாரத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் கடலோர சமூகங்களின் வாழ்வாதார முடக்கம் ஆகிய குறித்து உள்நாட்டுச் சட்ட அமைப்புகள் முறையான தீர்வுகளை வழங்கத் தவறும்போது, சர்வதேச நிறுவனங்களைப் பொறுப்புகூற வைக்க சர்வதேச தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட சமூகங்கள், எதிர்கால சந்ததியினர் மற்றும் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் சுற்றாடல் நீதியானது தேசிய எல்லைகளைத் தாண்டி வலுவான சர்வதேசச் சட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீட்டு சர்ச்சையில் தொடர்புடைய தரப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்களின் சட்டக் குழுவினர் செப்டெம்பர் 29 அன்று இலங்கை வருகை தந்து, திறைசேரி மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் உட்படப் பல சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





