பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒன்றிணைவோம்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அழைப்பு
பிம்ஸ்டெக் அமைப்பின் கீழ் பொது சுகாதார ஒத்துழைப்புக்கான தலைமை நாடாகச் செயல்படுவதை இலங்கை பெரும் பேறாகக் கருதுகிறது.
வங்காள விரிகுடா பிராந்தியத்தில் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தவும், பொதுச் சுகாதார சவால்களைக் கூட்டாக எதிர்கொள்ளவும் வலுவான மற்றும் பயனுள்ள தொடர்பு வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் 11-11-2026 அன்று ஆரம்பமான முதலாவது பிம்ஸ்டெக் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் தலைமை உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
பிம்ஸ்டெக் அமைப்பின் கீழ் பொது சுகாதார ஒத்துழைப்புக்கான தலைமை நாடாகச் செயல்படுவதை இலங்கை பெரும் பேறாகக் கருதுகிறது. இந்தப் பொறுப்பை வங்காள விரிகுடா பிராந்திய மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கூட்டு அர்ப்பணிப்பாகப் பார்க்கின்றோம்.
நிலையான வளர்ச்சிக்கு சுகாதாரம் அடிப்படையான தூணாகும். தொற்றுநோய்கள், பெருந்தொற்றுகள், நுண்ணுயிர் எதிர்ப்புக்கு எதிரான தாக்குப் பிடிக்கும் தன்மை, தொற்றா நோய்கள் மற்றும் பருவநிலை சார்ந்த சுகாதார அவசரநிலைகள் போன்றவற்றுக்கு தனிமைப்படுத்தப்பட்ட முயற்சிகள் போதாது; ஒருங்கிணைந்த பிராந்திய பதிலளிப்பு நடவடிக்கைகள் அவசியமாகும்.
முறையான ஒப்பந்தங்கள் மாத்திரமின்றி, தொடர்ச்சியான தொடர்பு, பரஸ்பர நம்பிக்கை, உரிய நேரத்தில் தகவல் பரிமாற்றம் மற்றும் அமைச்சர்கள், பொதுச் சுகாதார நிறுவனங்கள், நோய் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் ஆய்வூடங்களுக்கு இடையே நேரடியான நெருக்கமான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
பொதுவான சவால்களை அடையாளம் காண்பதைத் தாண்டி, தெளிவான முன்னுரிமைகள், நடைமுறைக்கு உகந்த செயல்-சார்ந்த அர்ப்பணிப்புகள் மற்றும் செயலாக்கத்திற்கான வழிமுறைகளை உருவாக்குவதே இம்மாநாட்டின் முக்கிய இலக்காகும்.
பிராந்திய நாடுகளின் கூட்டுத் தலைமை மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் மீள்தன்மை கொண்ட வங்காள விரிகுடா பிராந்தியத்தை உருவாக்க முடியும் என நம்புகின்றோம் என்றார்.





