எந்தவொரு வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கும் அரசாங்கம் அடிபணியாது - அமைச்சரவை பேச்சாளர்
தற்போது பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலுக்கு மத்தியில், தேவையற்ற மோதல்களில் இலங்கை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிக்கிக்கொள்வதைத் தவிர்ப்பது அவசியமாகும்.
வெளிநாட்டு அரசாங்கங்களின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்தோ அல்லது அழுத்தங்களுக்குப் பணிந்தோ அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. நாட்டின் இறையாண்மை மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கையாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 13-10-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையும் ஈரானும் நீண்டகால நட்புறவைக் கொண்ட நாடாகும். எவ்வாறாயினும், தற்போது பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலுக்கு மத்தியில், தேவையற்ற மோதல்களில் இலங்கை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிக்கிக்கொள்வதைத் தவிர்ப்பது அவசியமாகும்.
'அமெரிக்காவின் எச்சரிக்கை அல்லது அச்சுறுத்தல்களுக்குப் பயந்தே ஈரானியக் கப்பல்களுக்கு ஆதரவு வழங்கப்படவில்லை' என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதும், எமது பிரஜைகளை போரின் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதுமே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.
அதேவேளை, எந்தவொரு சர்வதேச நெருக்கடியின்போதும் மனிதநேய அடிப்படையிலான உதவிகளை வழங்க இலங்கை அரசாங்கம் எப்போதும் தயங்காது. வெளிநாட்டுத் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், நாட்டின் இறையாண்மையையும் சுயாதீனத்தையும் பாதுகாக்கும் அதேவேளையில், அனைத்து நாடுகளுடனும் சமநிலையான இராஜதந்திர உறவுகள் தொடர்ந்தும் பேணப்படும் என்றார்.





