முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசத்துக்கு 18வரையில் விளக்கமறியல்
சந்தேக நபரை எந்த நிபந்தனைகளின் கீழும் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றைக் கோருகின்றேன்.' என சட்டத்தரணி காமினை அல்விஸ் கோரினார்.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசத்தை, இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகல் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது நீதிமன்றில் பிரசன்னமான இலஞ்ச ஆணைக்குழு அதிகாரி காமினி அபேசிங்க நீதிமன்றத்தில் பின்வருமாறு கூறினார்.
"இந்த சந்தேக நபர், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக (பரவலாக்கப்பட்ட மற்றும் நிர்வாகம்) நியமிக்கப்பட்ட சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, கல்வி அமைச்சைச் சேர்ந்த இரண்டு பணியாளர்களையும், பொது நிர்வாக அமைச்சைச் சேர்ந்த இரண்டு பணியாளர்களையும் தனது அலுவலகத்தில் இணைக்குமாறு ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, பணியாளர்களும் அவரது அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்பிறகு, அந்த சந்தேக நபர், தனக்காக இரண்டு பணியாளர்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்குமாறு ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, இரண்டு நிர்வாக உதவியாளர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட இரண்டு தற்காலிகப் பணியாளர்கள் பணியிலிருந்து விலகிய பிறகு, மேலும் இரண்டு பணியாளர்கள் அதே முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அந்த இரண்டு பணியாளர்களும் ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரியவில்லை. அவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்து கைரேகைகளைப் பதிவு செய்யவோ அல்லது வருகைப் பதிவேடுகளில் கையொப்பமிடவோ இல்லை. இருப்பினும், அவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தால் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்பட்ட பணியாளர்களில் மூவர், இந்த சந்தேக நபருக்குச் சொந்தமான குளியாபிட்டிய பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
விசாரணையில், இந்த ஊழியர்களில் இருவர் 2024-ல் வெளிநாடு சென்ற பிறகும் இரண்டு மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த ஊழியர்களில் ஒருவர் தற்போதும் சந்தேக நபரின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முகாமையாளராக பணிபுரிந்து வருகிறார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரிடமிருந்து ஒரு வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்த ஊழியர் ஒரு சத்தியக் கடதாசியுடன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் வந்தார்.
அந்த சத்தியக் கடதாசியில் , தான் முன்பு அளித்த வாக்குமூலத்தில் சில வேறுபாடுகள் இருப்பதாகவும், சத்தியக் கடதாசியில் உள்ள தகவல்கள் உண்மையானவை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தப் சத்தியக் கடதாசியில், சந்தேக நபரான அகில விராஜ் கரியவசத்தின் ஒருங்கிணைப்பு அலுவலகம் குளியாபிட்டியாவில் உள்ள பெட்ரோல் நிலையக் கட்டிடத்தின் மேல் தளத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தனது முந்தைய வாக்குமூலத்தில் அவர் இது போன்ற எதையும் குறிப்பிடவில்லை.
இது, சாட்சி முதலில் அளித்த வாக்குமூலத்திற்கு முற்றிலும் முரணானது. இந்த சந்தேக நபரின் அழுத்தத்தின் காரணமாக இந்த சத்தியக் கடதாசியை சமர்ப்பித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த விஷயங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதேபோல், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபோது, சந்தேக நபர் பல ஆவணங்களை இலஞ்ச ஆணைக்குழுவிடம் ஒப்படைத்தார். அவற்றில் சில இந்த ஆண்டு தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அது குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இந்தச் சூழ்நிலையில், சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டால், அது விசாரணைக்குத் தடையாக அமையக்கூடும் என்பதால் அவர் விளக்கமரியலில் வைக்கப்படல் வேண்டும்.' என குறிப்பிட்டார்.
அதன்பிறகு, சந்தேக நபருக்காக ஆஜரான சட்டத்தரணி காமினி அல்விஸ் நீதிமன்றத்தில் பின்வருமாறு கூறினார்:
' கனம் நீதிவான் அவர்களே, இந்தச் சந்தேக நபரின் ஒருங்கிணைப்பு அலுவலகம், குளியாபிட்டியவில் அவரது எரிபொருள் நிலையம் அமைந்திருந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்தது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் குறிப்பிடப்பட்ட மூன்று ஊழியர்களும் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்தனர்.
அவர்கள் எரிபொருள் நிலையத்தில் ஒருபோதும் பணிபுரியவில்லை. இந்த ஊழியர்களில் இருவர் தற்போது வெளிநாடு சென்றுவிட்டனர். அதேபோல, இந்த ஊழியர்கள் ஜனாஹிபதி செயலகத்தில் இருந்து விலகிய பின்னரும் சம்பலம் பெற்றதாக கூரபப்டுவது பொய்யாகும்.
சந்தேக நபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் தனது வாக்குமூலத்தை அளித்தபோது, இந்த ஊழியர்களின் வருகை தொடர்பான ஆவணங்களை இலஞ்ச ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தார். அத்தகைய ஆவணம் இருப்பதை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறியவில்லை.
இதுவே இது ஒரு முழுமையற்ற விசாரணை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சாட்சிகள் வெளிநாடு சென்றுவிட்டனர். அவர்கள் திரும்பும் வரை இந்தச் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க முடியாது. இந்த ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கியதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகளை இலஞ்ச ஆணையம் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவே இல்லை.
சந்தேக நபரை எந்த நிபந்தனைகளின் கீழும் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றைக் கோருகின்றேன்.' என சட்டத்தரணி காமினை அல்விஸ் கோரினார்.
அப்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு அதிகாரி நீதிமன்றத்தில், இந்த சந்தேக நபரின் வேண்டுகோளின் பேரில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களைத் தனது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியதன் மூலம், அரசுக்கு ரூ. 2,768,836.14 இழப்பை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம தனது உத்தர்வை திறந்த மன்றில் அறிவித்தார். அதன்படி முன்வைக்கப்ப்ட்ட விடயங்கலை ஆராயும் போது, சந்தேக நபர் சாட்சியங்கலுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகலை முன்னெடுத்திருப்பதாக தெலிவாவதால் பிணை சட்டத்தின் 14 ஆவது அத்தியாயத்தின் கீழ் உள்ள விடயங்களை கருத்தில் கொண்டு பிணை கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்தார்.
இதற்கிடையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபரான அகில விராஜ் கரியவசம் குற்றவாளிக் கூண்டிலிருந்து தனது சட்டத்தரணிகலுடன் பேசுவதைக் கண்ட நீதிபதி, அதற்குத் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இத்தகைய நடவடிக்கைகள் தனது நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படாது என்றும், அவை நீதித்துறை நடவடிக்கைகளுக்குத் தடையாக அமையும் என்றும் நீதிபதி எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது..





