பலாலி விமானநிலையத்தில் நிவாரணப் பொருட்களுடன் அமெரிக்க விமானம்
உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதற்கென அமெரிக்கா இலங்கையிலுள்ள சர்வதேச உதவி முகவரமைப்புக்கள் ஊடாக முதற்கட்டமாக 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை வழங்கியது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான மனிதாபிமான நிவாரணப்பொருட்களை ஏற்றிய அமெரிக்க விமானம் நேற்று யாழ். பலாலி சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதற்கென அமெரிக்கா இலங்கையிலுள்ள சர்வதேச உதவி முகவரமைப்புக்கள் ஊடாக முதற்கட்டமாக 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை வழங்கியது.
அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் உயிர்காக்கும் நோக்கில் உடனடி உதவியாக 2 மில்லியன் டொலர்கள் நிதியை வழங்குவதாக அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் அறிவித்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் அவ்வுதவிகளின் அடுத்தகட்டமாக மனிதாபிமான நிவாரணப்பொருட்களை ஏற்றிய அமெரிக்க விமானம் நேற்று திங்கட்கிழமை (8) யாழ். பலாலி சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தது.
அவ்விமானத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நிவாரணப்பொருட்கள் உள்ளடங்கியிருப்பதாகவும், மிகவும் சவாலான இத்தருணத்தில் இலங்கையுடன் தோளோடு தோள் நிற்கும் சகல தரப்பினருக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாகவும் பலாலி விமானநிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





