கத்தோலிக்க ஆயர் பேரவைக்கு சுரேஸ் சலேவின் மனைவி கடிதம்
தாமதிக்கப்பட்ட நீதி வேதனையானது. எமது குடும்பம் ஒரு தீவிர கத்தோலிக்க பின்னணியைக் கொண்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை ஒவ்வொரு சந்தேகநபரும் நிரபராதியாகக் கருதப்பட வேண்டும் என்ற அடிப்படைச் சட்டக் கோட்பாடு எனது கணவர் விஷயத்தில் முழுமையாக மறக்கடிக்கப்பட்டு, நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே அவருக்குப் பகிரங்கமாகத் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. எனது கணவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களைத் தடுத்து, தமக்கு நீதி பெற்றுத் தருமாறு சுரேஸ் சலேவின் மனைவி கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் கலாநிதி அந்தனி பெரேரா உட்பட சகல மறைமாவட்ட ஆயர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
எந்தவொரு நீதிமன்றமும் எனது கணவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பதற்கு முன்னரே, அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான 'சூத்திரதாரி' எனப் பகிரங்கமாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. முப்படைகளில் 35 வருடங்களுக்கும் மேலாக ஐந்து ஜனாதிபதிகளின் கீழ் அரசியல் சார்பின்றி நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய எனது கணவர், தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு சந்தேக நபராக மட்டுமே விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளாரே தவிர, அவர் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை ஒவ்வொரு சந்தேகநபரும் நிரபராதியாகக் கருதப்பட வேண்டும் என்ற அடிப்படைச் சட்டக் கோட்பாடு எனது கணவர் விஷயத்தில் முழுமையாக மறக்கடிக்கப்பட்டு, நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே அவருக்குப் பகிரங்கமாகத் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகப் பல வருடங்களாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, அமெரிக்காவின் எப்.பி.ஐ மற்றும் அவுஸ்திரேலிய பெடரல் பாதுகாப்புதுறை உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் நடத்திய எந்தவொரு விசாரணையிலும் எனது கணவர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.
எனினும், அருட்தந்தையர்களான ஜூட் ரொஹான் சில்வா மற்றும் சிறில் காமினி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றச் செயல்பாடுகள் நிலுவையில் உள்ள பின்னணியிலும், அவரைப் பகிரங்கமாகக் குற்றவாளியாகச் சித்தரித்து வருவது எங்களது குடும்பத்துக்கு அளவிட முடியாத துன்பத்தையளிக்கிறது. மேலும், தடுப்புக் காவலில் உள்ள எனது கணவர் சித்திரவதைகளுக்கும், அநாகரிகமான மற்றும் அவமதிப்பான நடத்தைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்பது சட்டவைத்திய அதிகாரிகள் மற்றும் மனநல மருத்துவர்களின் அறிக்கைகள் மூலம் உறுதியாகியுள்ளது. நீதிமன்றம் அவரைப் பின்னாளில் நிரபராதி என்று தீர்ப்பளித்தால் கூட, இழந்த பல வருட அவமானத்தையோ அல்லது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன உளைச்சலையோ எந்தவொரு தீர்ப்பினாலும் மீண்டும் பெற்றுக்கொடுக்க முடியாது.
தாமதிக்கப்பட்ட நீதி வேதனையானது. எமது குடும்பம் ஒரு தீவிர கத்தோலிக்க பின்னணியைக் கொண்டது. திருச்சபையை நாம் நம்பிக்கையுடனேயே பார்க்கின்றோம். எனவே, நீதிமன்றச் செயல்முறைகள் நிறைவடைவதற்கு முன்னரே ஒருவரை முதன்மை சூத்திரதாரியாக பகிரங்கமாக அடையாளப்படுத்துவது நீதி, உண்மை மற்றும் கருணை ஆகிய திருச்சபையின் மாறாத விழுமியங்களுடன் ஒத்துப்போகின்றதா என்பது குறித்துப் பரிசீலித்து, கத்தோலிக்க ஆயர்கள் இதில் தலையிட வேண்டும் என அவர் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.





