பாதுகாப்பு அமைச்சின் தடை பட்டியலில் 16 அமைப்புக்கள், 206 தனிநபர்கள்
தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பெயர்கள் தொடர்ந்து உள்ளடக்கப்பட்டு வருகின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உள்ளடங்கலாக தடைசெய்யப்பட்ட 16 அமைப்புக்கள் மற்றும் 206 தனிநபர்களின் பெயர் விபரங்களைக் குறிப்பிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தாவினால் புதுப்பிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புகளைப் பேணிவரும் மற்றும் அவற்றைத் தூண்டும் வகையில் இயங்கிவரும் அமைப்புக்களைத் தடைசெய்து இலங்கை அரசாங்கங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுவருகின்றன. அவ்வாறு தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பெயர்கள் தொடர்ந்து உள்ளடக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி அரசாங்கத்தினால் கடந்த 6 ஆம் திகதி வெளியிடப்பட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலில் தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, உலகத் தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் நிவாரண நிதியம், தலைமையகக் குழு, கனேடிய தமிழர் Nதுசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் சேவ் த பேர்ள்ஸ் ஆகிய தமிழ் இயக்கங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பெயர்களும் தேசிய தௌஹித் ஜமாத், ஜமாதே மிலாதே இப்ராஹிம், விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சுப்பர் முஸ்லிம் ஆகிய இஸ்லாமிய அமைப்புக்களின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளன.
அதேபோன்று ஜேசுராசா அமலதாஸ், விஸ்வநாதன் ருத்ரகுமரன், அப்பாத்துரை செந்தில் விநாயகம், சந்திரா வரதகுமார், வீரசிங்கம் நாகேஸ்வரன், நடராஜா சத்தியசீலன், அமிர்தலிங்கம் திலீபன், விநாயகமூர்த்தி மோகனசுந்தரம், மொஹமது இப்திகார் மொஹமது இன்சாப், அப்துல் காதர் மொஹமட் ஷாஸ்னி, மொஹமது பாருக் முஹம்மது ஹிலாம், முகமது இப்ராகிம் சாதிக் அப்துல்லா, மொஹம்மது சரிபு ஆதம் லெப்பே, அப்துல் லதீப் மொஹமட் சாபி ஆகியோர் உள்ளடங்கலாக 206 தனிநபர்களின் பெயர்களும் அவ்வர்த்தமானி அறிவித்தலில் உள்வாங்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் இவ்வமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் சார்ந்த செயற்பாடுகள், நிதியங்கள் மற்றும் சொத்துக்கள் என்பன நாட்டுக்குள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.





