போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்கப்போவதில்லை: பிரதி பாதுகாப்பு அமைச்சர்
போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாமல் ஒழிப்பதே எமது நோக்கம் போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.
போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாமல் ஒழிப்பதே எமது நோக்கம் போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. ஆகையால் இவ்வாறான குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் உடனடியாக இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து விலகுமாறு பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர எச்சரித்துள்ளார்.
கடற்படையினரால் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் ஆழ்கடலில் வைத்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மீன்பிடி படகு வியாழக்கிழமை (20) தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டதுடன், அதனை நேரில் சென்று கண்காணித்திருந்த போதே பிரதி பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தெற்கு ஆழ்கடலில் புதன்கிழமை (19) கடற்படையினர் விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து போதைப்பொருளுடன் பயணித்த ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்றை கைது செய்துள்ளனர். சர்வதேச நாடுகளுடனான தகவல் பரிமாற்றத்தின் மூலம் அறியக்கிடைத்த தகவல்களைக் கொண்டு கடற்படையின் நீண்ட தூர நடவடிக்கை பிரிவினர் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்து சந்தேகநபர்களுடன் இந்த மீன்பிடி படகை கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் குறித்த படகிலிருந்து மீட்கப்பட்டவை போதைப்பொருள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய 200 கிலோ கிராம் ஐஸ், 100 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 400 கோடி ரூபா பெறுமதி மிக்கது என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இரு துப்பாக்கிகளும், 2 மெகசின்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை திட்டமிட்ட குற்றச் செயல்களாகும். போதைப்பொருள் வர்த்தகம், துப்பாக்கி கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் அனைத்து நாட்டில் பரவலாக இடம்பெறுகிறது. தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கு அமைய அனைத்து பிரிவுகளும் சுயாதீனமாக செயற்பட வாய்பளிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த அரசாங்கங்கள் பாதுகாப்பு துறைசார்ந்த பிரிவுகள் சுயாதீனமாக செயற்படுவதை தடுத்துள்ளனர். அதன் பிரதிபலனை இப்போது காண்கிறோம். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களால் ஏற்படக்கூடிய அழிவை எமது அரசாங்கம் உணர்ந்துள்ளது. பொலிஸார், முப்படைகள், சகல புலனாய்வு பிரிவுகள் மற்றும் சர்வதேச புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 1500 கிலோ கிராம் ஹெரோயின், 15 ஆயிரம் கிலோ கிராம் கஞ்சா, 32 கிலோ கிராம் கொக்கைன், 3 ஆயிரம் கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 631 கிலோ கிராம் ஹசிஸ் மற்றும் 40 இலட்சத்துக்கும் அதிகமான போதைமாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு 69 ரி-56 ரக துப்பாக்கி, 79 கைதுப்பாக்கி, 52 ரிவேல்வர் மற்றும் ஏனைய வகை துப்பாக்கிகள் 1977 உள்ளடங்களாக 2171 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடற்படையினரால் மாத்திரம் 898 கிலோ ஹெரோயின், 5410 கிலோ கிராம் கேரள கஞ்சா , 2254 கிலோ கிராம் கஞ்சா, 2480 கிலோ கிராம் ஐஸ், 33 கிலோ கிராம் ஹசிஸ் மற்றும் 16 இலட்சம் போதைமாத்திரைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவை சுமார் 60 பில்லியன் ரூபா பெறுமதி மிக்கது எனவும் தெரியவந்துள்ளது. நாட்டில் ஊடுருவியுள்ள போதைப்பொருளை ஒழிப்பதற்கு பொதுமக்கள் அரசாங்கத்தினருடன் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்.
போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாமல் ஒழிப்பதே எமது நோக்கம் போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. ஆகையால் இவ்வாறான குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் உடனடியாக இவ்வாறான செயல்பாடுகளிலிருந்து விலகுமாறு எச்சரிக்கிறேன். பொலிஸார், முப்படையினர் என நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட முன்னிற்கும் பிரிவுகள் எம்முடன் கைகோர்த்துள்ளன. யுத்தத்தின் போது ஒன்றிணைந்து குரல் கொடுத்ததை போல இந்த நடவடிக்கைக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைவது அவசியம் என்றார்.





