முத்துநகர் விவசாயிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு உரிய காணியை அரசாங்கம் சூரிய மின்சக்தி திட்டத்துக்காக ஒதுக்கியுள்ளது.
இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள முத்து நகர் 800 ஏக்கர் விவசாய காணியை மீள விவசாயிகளுக்கு பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்று பிரதமர் காரியாலயத்துக்கு முன்பாக முத்து நகர் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
முத்து நகர் பகுதியில் உள்ள 800 ஏக்கர் விளை நிலத்தையும், தமது வாழ்வாதாரத்தையும் இழந்து விவசாயிகள் வாழ வழியின்றி கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். அரசாங்கத்திற்கு எமது பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ள போதும், அரசாங்கம் தொடர்ந்தும் விவசாயிகளின் விடயத்தில் அலட்சியமாக செயற்படுவதாக போராட்டக்கார்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.
திருகோணமலை முத்து நகர் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலங்கள் அரசாங்கத்தால் இந்திய நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விளை நிலங்களை தமக்கு பெற்றுத்தருமாறு வலியுறுத்தி 24-09-2025 முத்து நகர் விவசாயிகள் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10.30 மணியளவில் ஒன்று கூடிய ஆர்பாட்டக்காரர்கள் தமது வாழ்வாதாரமாக உள்ள விளை நிலங்களை இழந்து பெரும் நெலுக்கடிக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்தனர்.
முத்து நகரிலிருந்து 2 பேருந்துகளில் வருகைதந்திருந்த விவசாயிகள், பொதுமக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் மேற்படி போராட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தனர். விவசாயிகளிடமிருந்த காணிகளை அரசாங்கம் பறித்து வெளிநாட்டு நிறுவனத்திடம் கையளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு உரிய காணியை அரசாங்கம் சூரிய மின்சக்தி திட்டத்துக்காக ஒதுக்கியுள்ளது. மாற்றுக் காணிகளை வழங்காது விவசாயத்துக்காக இருந்த குளங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.
முத்து நகர் விவசாய காணி எமக்கானது அவற்றை திருப்பிக் கொடு, அரசாங்கத்தின் செயற்பாட்டால் வெளிநாட்டு கம்பெனிகள் இலாபமடைந்துள்ளன எனினும் விவசாயிகள் தெருவில் விடப்பட்டுள்ளனர், ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, எமது உரிமை எமக்கே வேண்டும், குளங்களை மூடும் நடவடிக்கையை கைவிடு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விவசாயிகளை இவ்வாறா நடத்துவீர் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியும் கோசமிட்டும் ஆர்ப்பாட்டக்கார்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.





