இலங்கை அரசாங்கத்தின் எண்ணப்போக்கு என்னவென்பதை அறிய முற்பட்ட இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி
புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தின் தற்போதைய நிலைவரம் பற்றி தமிழ்ப் பிரதிநிதிகள் இந்திய வெளியுறவு செயலாளரிடம் விரிவாக விளக்கமளித்தனர்.
இலங்கையில் தாம் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமது தரப்பில் எவ்வித தாமதமும் இல்லை எனவும், மாறாக அவற்றைத் துரிதமாக முன்னெடுப்பதற்கே தாம் விரும்புவதாகவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இருப்பினும் இந்திய தரப்பு தாமதிப்பதாகக் கூறி இலங்கை அரசாங்கமே இவ்விடயத்தைத் தட்டிக்கழித்து வருகிறது எனும் பொருள்பட விளக்கமளித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 05-08-2026 அன்று நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.
சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்த இச்சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், ப.சத்தியலிங்கம்,க.கோடீஸ்வரன் ஆகியோரும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன் மற்றம் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின்போது தற்போதைய அரசாங்கம் தாம் ஆட்சிபீடமேறி ஒருவருடகாலத்துக்குள் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அவ்வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என விக்ரம் மிஸ்ரியிடம் சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள், இவ்வாறானதொரு பின்னணியில் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு அழுத்தம் வழங்குவதற்கு அப்பால், அதனை நடத்துவதற்கான வலுவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
இருப்பினும் மாகாணசபை முறைமை குறித்து கருத்துரைத்த கஜேந்திரகுமார், அம்முறைமையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், மாகாணசபைகளுக்கான நிதி சார்ந்த அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பதனால் மாகாணங்களுக்கான சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவுசெய்வதிலேயே பின்னடைவுகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். அதன் காரணமாக மாகாணசபைகள் வெறும் பெயரளவிலான கட்டமைப்புக்களாக இருந்து பயனில்லை என்றும், அதற்கான அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களில் சிக்கல்கள் உள்ளபோது ஏற்படும் பாதிப்புக்கள் மிகமோசமானவையாக இருக்கும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
இதனிடையே கருத்து வெளியிட்ட சித்தார்த்தன், தாம் விட்ட தவறினால் தான் வடக்கில் தேசிய மக்கள் சக்தி காலூன்றியது போன்ற தோற்றப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், தாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் குறிப்பிட்டார். அதனை ஆமோதித்த செல்வம் அடைக்கலநாதன், எதிர்வரும் மாகாணசபைத்தேர்தலில் தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து பயணிக்காவிட்டால், கடந்த காலத்தில் முகங்கொடுத்த நிலையே ஏற்படும் என்றார்.
அதனைத்தொடர்ந்து புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தின் தற்போதைய நிலைவரம் பற்றி தமிழ்ப் பிரதிநிதிகள் இந்திய வெளியுறவு செயலாளரிடம் விரிவாக விளக்கமளித்தனர். அவற்றை செவிமடுத்த மிஸ்ரி, அரசியலமைப்பைப் பொறுத்தமட்டில் குறித்தவொரு இனம் சார்ந்து தாம் செயற்படமுடியாது என்றும், மாறாக இந்நாட்டின் சகல பிரஜைகளுக்குமான சமத்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதே தமது வலியுறுத்தல் என்றும் குறிப்பிட்டார். அதனை ஏற்றுக்கொண்ட தமிழ்ப் பிரதிநிதிகள் அனைத்துப் பிரஜைகளுக்குமான சமத்துவம் முன்னிலைப்படுத்தப்படாமை குறித்து எடுத்துரைத்தனர்.
அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் மக்களால் கைவிடப்பட்ட காணிகளா என விக்ரம் மிஸ்ரி தமிழ்ப் பிரதிநிதிகளிடம் வினவினார். அதற்குப் பதிலளித்த அவர்கள், உள்நாட்டு யுத்தம் மற்றும் அதனோடு இணைந்த அடக்குமுறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலர் சொந்தக் காணிகளிலிருந்து வெளியேறுவதற்கும், புலம்பெயர்வதற்கும் நிர்பந்திக்கப்பட்டதாகவும், அவை தனியாருக்கு சொந்தமான காணிகளே தவிர, கைவிடப்பட்ட காணிகள் அல்ல எனவும் தெளிவுபடுத்தினர். அதுமாத்திரமன்றி அண்மையகாலங்களிலும் பல்வேறு வழிமுறைகளின் ஊடாக தனியார் காணிகளைக் கையகப்படுத்துவதற்கும், அவற்றில் விகாரைகளை நிர்மாணிப்பதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர்கள் எடுத்துக்கூறினர்.
மேலும் இந்தியாவினால் இலங்கையில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படும் பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நிலவும் தாமதம் குறித்தும் இங்கு பேசப்பட்டது. இவ்விடயத்தில் அரசாங்கத்தின் எண்ணப்போக்கு என்னவாக இருக்கிறது என்பதை அறிய விரும்பிய வெளியுறவு செயலாளர் மிஸ்ரி, இலங்கையில் பொருளாதாரத்திட்டங்களைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கே தாம் விரும்புவதாகவும், தமது தரப்பில் எவ்வித தாமதமும் இல்லை எனவும் குறிப்பிட்டார். அத்தோடு இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் கேள்வி எழுப்பப்படுகையில், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக தொடர்பு அதிகாரி ஒருவரை நியமிக்கவேண்டும் என்பது போன்ற காரணங்களைக்கூறி, மேற்படி திட்டங்களின் அமலாக்கத்தை இலங்கை அரசாங்கமே தட்டிக்கழித்து வருகிறது எனும் பொருள்படும் வகையில் அவர் கரிசனை வெளியிட்டார்.





