இலங்கையை சேர்ந்த பிக்கு அமெரிக்காவில் கைது வணிக ரீதியிலான பாலியல் தொழிலாளிகளை நாடியதாக குற்றச்சாட்டு
பாலியல் தொழிலாளிகளாக நடித்த பொலிஸ் அதிகாரிகளால் இணையத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்துக்கு மஹாயாயே வினீத தேரர் பதிலளித்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பேராசையே துன்பத்தின் தோற்றுவாய் என கௌதம புத்தர் போதித்தார். இருப்பினும் இந்தக் கோட்பாட்டை விளங்கிக்கொள்வதற்கு இலங்கையைச்சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் இயல்புக்கு மாறானதொரு விதத்தில் செயற்பட்டதாக அமெரிக்காவின் மசசூசெட்ஸ் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளின் பிரகாரம், மசசூசெட்ஸில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பௌத்த மதகுருவாகக் கடமையாற்றிய 32 வயதான இலங்கையைச்சேர்ந்த பௌத்த பிக்குவான மஹாயாயே வினீத தேரர், பாலியல் தொழிலை வணிக ரீதியில் பெற்றுக்கொள்பவர்களை இலக்குவைத்து பொஸ்டன் பொலிஸார் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டார். இவருடன் மேலும் 6 ஆண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனனர்.
மஹாயாயே வினீத தேரர் கடந்த 2024 டிசம்பர் மாதம் முதல் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பௌத்த மதகுருவாகக் கடமையாற்றி வந்ததுடன், மாணவர்களுக்கான ஆன்மீக வழிகாட்டலையும் வழங்கி வந்தார்.
இந்நிலையில் பொஸ்டனில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஃபீபா உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்பதாக ஆட்கடத்தல் மற்றும் வணிக ரீதியிலான பாலியல் தொழில் என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பொஸ்டன் பொலிஸாரால் 'ஒப்ரேஷன் ரெட் கார்ட்' எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இரகசிய நடவடிக்கை மூலமே மேற்குறிப்பிட்ட கைது இடம்பெற்றுள்ளது.
பாலியல் தொழிலாளிகளாக நடித்த பொலிஸ் அதிகாரிகளால் இணையத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்துக்கு மஹாயாயே வினீத தேரர் பதிலளித்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதுமாத்திரமன்றி பாலியல் ரீதியான பல்வேறு செயல்களில் ஈடுபடுமாறு அவர் கோரியதாகவும், அதற்காக 125 - 400 அமெரிக்க டொலர்கள் வரை செலுத்துவதாகக் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறானதொரு பின்னணியில் பொஸ்டனில் உள்ள மொக்ஸி பொஸ்டன் டவுன்ரவுன் ஹோட்டலில் வைத்து மேற்குறிப்பிட்ட தேரர் உள்ளிட்ட எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் இன்னமும் நிரூபிக்கப்படாத நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மஹாயாயே வினீத தேரர் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





