கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
மகாவலி அதிகாரசபையால் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்னர் வர்த்தக நோக்கில் வழங்கப்பட்டு, இதுவரை எந்தவொரு திட்டமும் ஆரம்பிக்கப்படாத காணிகளை உடனடியாக அரசாங்கத்தால் மீளப் பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள், காணி நிரப்புதல்கள் மற்றும் கடலோரக் கட்டுமானங்களைத் தடுக்கும் நோக்கில், ஜனாதிபதி சமர்ப்பித்த விசேட திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இத்தகைய சட்டவிரோத செயல்களால் கிழக்கு மாகாணத்தில் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் எழுந்துள்ளதோடு, கடுமையான கடலரிப்பும் இயற்கைச் சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளன. மேலும், யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்தும் இடம்பெயர்ந்த மக்கள் முறையாக மீளக்குடியமர்த்தப்படாததால், மாகாண அபிவிருத்தி மற்றும் தேசிய பாதுகாப்புக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காணும் வகையில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைவாக, தென்மாகாண முன்னாள் காணி ஆணையாளர் சேனக பல்லியகுருகே தலைமையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய 'கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல்' என்ற விசேட குழு நியமிக்கப்படவுள்ளது. அத்துடன், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் காணி ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்த, பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் கீழ் விசேட அலகு ஒன்று நிறுவப்பட்டு பாதுகாப்புப் பிரிவினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
மேலும், மகாவலி அதிகாரசபையால் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்னர் வர்த்தக நோக்கில் வழங்கப்பட்டு, இதுவரை எந்தவொரு திட்டமும் ஆரம்பிக்கப்படாத காணிகளை உடனடியாக அரசாங்கத்தால் மீளப் பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மீளப் பெறப்படும் காணிகள் பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, முறையான திட்டத்தின் கீழ் பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக பகிர்ந்தளிக்கப்படும்.
இவை தவிர, கிழக்கு கடற்கரையின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான துரித திட்டம் தயாரிக்கப்படுவதுடன், கடற்கரையோர ஹோட்டல் நிர்வாகங்களின் போது அரச அதிகாரிகள் எவ்வித பக்கச்சார்புமின்றி சட்டத்தை வெளிப்படைத்தன்மையுடன் அமல்படுத்துவதை உறுதி செய்வதற்கான புதிய பொறிமுறையொன்றும் உருவாக்கப்படவுள்ளது.





