வெலிக்கடை, குருவிட்ட மற்றும் பள்ளஞ்சேனை சிறைச்சாலைகளில் அமைதியின்மை
காயமடைந்த கைதிகள் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வெலிக்கடை, குருவிட்ட மற்றும் பள்ளஞ்சேனை ஆகிய மூன்று சிறைச்சாலைகளிலும் ஆகிய இரு தினங்களில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் நிலைமை மற்றும் அமைதியின்மை காரணமாக 3 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு இம்மோதலின் போது காயமடைந்த நிலையில் 50 க்கும் மேற்பட்ட கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து குறித்த சிறைச்சாலைகளுக்கு பொலிஸார், இராணுவத்தினர், கலகத்தடுப்பு பிரிவினர் ஆகியோர் வரவழைக்கப்பட்டு சிறைச்சாலைகளின் பாதுகாப்புகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
மெகசின் சிறைச்சாலையில் 07-08-2026 அன்று இரு தரப்பைச் சேர்ந்த கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து சிறைச்சாலையினுள் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. நள்ளிரவு வேளையை அண்மித்த போது ஏற்பட்ட இந்த மோதலில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 கைதிகள் காயமடைந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சிறைச்சாலையின் ஈ அறையில் தங்க வைக்கப்பட்டிருந்த கைதிகளிடையே மேற்படி கலவரம் ஏற்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. சிறைச்சாலை மதிலுக்கு அப்பால் வெளிப்பகுதியிலிருந்து வீசப்பட்ட சிறிய பொதி ஒன்றை சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைப்பற்றிய சம்பவத்தை முன்னிறுத்தி மேற்படி மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது சுமார் 40 சிறைக்கைதிகள் பூட்டப்பட்டிருந்த வார்ட்டின் கதவுகளை உடைத்து வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படைப்பிரிவினர், இராணுவத்தினர், விமானப்படை மற்றும் கலகத் தடுப்பு பிரிவினரும் சிறைச்சாலைக்கு அழைக்கப்பட்டு சிறைச்சாலையின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் குறித்த கைதிகள் அவர்களது வார்ட்டுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டனர். எவ்வாறெனினும் நேற்றைய தினம் காலையாகும் போது சிறைச்சாலை வளாகம் பாதுகாப்பு பிரிவினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
அத்தோடு சிறைச்சாலை வளாகத்தைக் கண்காணிப்பதற்காக விமானப் படையினரால் சம்பவத்தன்று ட்ரோன்களும் வானில் பறக்கவிடப்பட்டன. படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் காலை 6.30 மணியளவில் மேற்படி கைதி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோதலை வழிநடத்தியவர் என தெரிவிக்கப்படும் கொஸ் மல்லி என்பவரின் தரப்பை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமையைத் தொடர்ந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 சிறைக்கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது. குறித்த மோதலின் போது சிறைச்சாலையின் சொத்துகளுக்கும் கைதிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
கைதிகளின் பாதுகாப்பைக் கருதி நேற்றைய தினம் கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும் அமைதியின்மை ஏற்பட்டிருந்த போது சிறைச்சாலை முன்பாக பெருமளவிலான பிரதேசவாசிகள் அங்கு வருகை தந்திருந்ததோடு, நீர்த்தாரைப் பீச்சு வாகனங்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்தும் சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குருவிட்ட சிறைச்சாலையிலும் கைதிகளிடையே அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளின் தலையீட்டுடன் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும், மீண்டும் நேற்றைய தினம் காலை, 7.00 மணியளவில் சிறைச்சாலை சமையல் அறைக்கு வந்துள்ள கைதி கள் சிலர் உணவுத்தவிர்ப்பு போராட் டத்தில் ஈடுபாடுவதாக கூறி அங்குள்ளவர்களை தாக்கி உள்ளனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து இரு குழுக்களுக்கு இடையில் சண்டை ஆரம்பித்துள்ள நிலையில் சிறைச்சா லை அதிகாரிகள் சிறையை விட்டு வெளியில் வந்துள்ளதாகவும் வெளியில் வந்த அதிகாரிகள் சிறைகைதிகள் தப்பி ஓடாதிருக்க பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போது சிறை கைதிகள் சிறை கதவுகளை உடைத்து வெளியில் பாய்ந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது பாதுகாப்பு தரப்பினறினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டின் போதே இரண்டு நபர்கள் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குருவிட்ட பெர ரடைஸ் பகுதியை சேர்ந்த பிரபாத் மஞ்சுல சமரசிங்க(44),அவிசாவலை பு வக்பிட்டிய பகுதியை சேர்ந்த வடிவேல் (தந்தையின் பெயர் )38வயதுடையை இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த மோதலும் தீவிரமடைந்திருந்த நிலையில், கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையைத் தாக்கி சேதம் விளைவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படைப்பிரிவினர் மற்றும் ஆயுதம் தாங்கிய முப்படையினரும் நேற்றைய தினம் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டனர். மேலும் மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்புப் பிரிவினரால் கண்ணீர்ப்புகை மற்றும் வானை நோக்கிப் பல முறை துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டிருந்தது. பெரும் பிரயத்தனத்துக்குப் பின்னர் அதிகாரிகள் சிறைச்சாலையை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். இந்த அமைதியின்மையின் போது காயமடைந்த இரு கைதிகள் உயிரிழந்ததோடு, மேலும் 17 கைதிகள் காயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
பள்ளஞ்சேனை திறந்தவெளி சிறைச்சாலையிலும் கைதிகள், சிறைச்சாலை கட்டிடங்களின் கூரை மீது ஏறி சிறைச்சாலை நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் வரை வந்து கைதிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். சிறைச்சாலையின் மதில்களுக்கு சேதம் விளைவித்திருந்ததோடு, கொங்கிரீட் துண்டுகளை சிறைச்சாலைக்கு வெளிப்புறமாக எறிந்து தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தீவிரமடைவதைத் தடுப்பதற்காக பெருமளவிலான பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படைப்பிரிவினர், இராணுவத்தினர், கலகத் தடுப்பு பிரிவினர் மற்றும் விமானப்படையும் வரவழைக்கப்பட்டு பல மணிநேரங்களின் பின்னர் சிறைச்சாலை பாதுகாப்புப் பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சிறைச்சாலை நடவடிக்கைகள் வழமைக்குக் கொண்டுவரப்பட்டன. இதன்போது கைதிகளைக் கட்டுப்படுத்துவதற்காகக் கண்ணீர்ப்புகைப் பிரயோகங்களும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் மோதல் சம்பவத்தில் காயமடைந்த 28 கைதிகள் வெளிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் போதியளவிலான இடவசதியின்மை மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமையால் வழக்கு விசாரணைகளைத் துரிதமாக நிறைவு செய்யுமாறு கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் நேற்றைய தினம் பிற்பகல் ஆகும் போது குறித்த மூன்று சிறைச்சாலைகளிலும் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதோடு, சிறைச்சாலை நடவடிக்கைகள் சிறைச்சாலைத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. மேலும் காயமடைந்த கைதிகள் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு நாட்களாகத் தொடர்ந்த மோதலை அடுத்து, அங்கிருந்த கைதிகள் பள்ளஞ்சேனை, வெளிக்கடை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேற்படி அமைதியின்மை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.





