குழந்தைகளை மரியாதையுடனும் வளர்க்கக்கூடிய சூழலை அரசு உருவாக்க வேண்டும் - ரவிகரன் எம்.பி
குடும்பங்களின் நம்பிக்கை அதிகரிக்கும் போது பிறப்புகளின் எண்ணிக்கையும் இயல்பாக அதிகரிக்கும்.
குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதால் மாத்திரம் இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது.குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு குடும்பங்களைக் கோருவதற்கு முன்னர், அந்த குழந்தைகளை பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் வளர்க்கக்கூடிய சமூகச் சூழலை அரசு உருவாக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். .
பாராளுமன்றத்தில் 11-09-2026 அன்று நடைபெற்ற இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்கவேண்டும் என்ற தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்க வேண்டும் என்ற இந்தப் பிரேரணையின் அடிப்படை நோக்கத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.ஆனாலும் ஊக்குவிப்புத் தொகையால் மாத்திரம் குழந்தை பிறப்பை நிலையான முறையில் அதிகரிக்க முடியாது. குழந்தையைப் பெற்றெடுத்து, பாதுகாப்பாகப் பராமரித்து, தொழிலையும் குடும்ப வாழ்க்கையையும் ஒன்றாக முன்னெடுக்கக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாக இருக்க வேண்டும்.
இது குடும்பங்களுக்கான பணம் வழங்குவதால் மாத்திரம் தீர்க்கக்கூடிய பிரச்சினை அல்ல. வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, குழந்தை பராமரிப்பு,போக்குவரத்து மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய அனைத்துடனும் தொடர்புடைய ஒரு தேசிய மட்டப் பிரச்சினை.
வன்னித் தேர்தல் மாவட்டத்தின் நிலைமையை கருதும் போது, வெளிமாவட்டங்களில் இருந்து வந்து பணிபுரியும் ஊழியர்கள், வெளிமாவட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள், கணவன் ஒரு மாவட்டத்திலும் மனைவி மற்றொரு மாவட்டத்திலுமாக பணிபுரியும் ஊழியர்கள், ஐந்தாண்டுக்கும் மேலாக பணிபுரிந்தும் பதிலீடு இன்றிய இடமாற்றத்தால் தொடர்ந்தும் வெளிமாவட்டத்தில் தக்க வைக்கப்படும் ஊழியர்களும் உள்ளனர்.
சூரியன் உதிக்க முதல் வீட்டிலிருந்து வெளியேறி சூரியன் மறைந்த பின்னர் வீடு திரும்பும் நிலை இங்கு பல பெண்களுக்கு உண்டு. கர்ப்ப காலத்திலும் இத்தகைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பது அவர்களின் உடல் நலம்இ பாதுகாப்பு மற்றும் குடும்ப நலனுக்கு அச்சுறுத்தலாகிறது. பணியிடங்களில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையும் அதிக பணிச்சுமையும் மகப்பேறு தொடர்பான தீர்மானங்களை தொடர்ச்சியாக தள்ளிப்போடுவதற்கான அழுத்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகின்றன.
அரச பெண் ஊழியர்களுக்கு ஒவ்வொரு உயிர்ப்பிறப்புக்கும் விடுமுறை பெறக்கூடிய ஏற்பாடு உள்ளது. ஆனால் தனியார் துறையில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இதே அளவிலான பாதுகாப்பு கிடைப்பதில்லை. தனியார் துறை முழுவதற்கும் பொதுவான சட்ட உரிமையாக இல்லை.
ஒரே நாட்டின் தாய்மாருக்கு அவர்கள் பணிபுரியும் துறையைப் பொறுத்து வெவ்வேறு அளவிலான பாதுகாப்பு வழங்கப்படுவது நியாயமானதா? குழந்தை பிறந்த பின்னரும் குழந்தை முன்பள்ளிக்குச் செல்லும் வரை, பெற்றோர் தமது வேலை நேரத்தில் குழந்தையை பராமரிப்பதற்காக வேறு ஒருவரை அமர்த்த வேண்டியுள்ளது. தரமானதும் கட்டுப்படியாகக்கூடியதுமான பகல்நேரக் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் மிகவும் குறைவாக உள்ளன. வன்னியில் இந்த வசதி மேலும் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் தமது தொழிலைத் தொடர்வதா குழந்தையைப் பராமரிப்பதா என்ற இரண்டில் ஒன்றைத் தெரியவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பாதுகாப்பான பணிச்சூழல், குடும்பங்களை ஒன்றிணைக்கும் இடமாற்றக்கொள்கை, அரச தனியார் துறைகளில் சமமான மகப்பேற்று விடுமுறை ஒழுங்கு, தந்தையர்குரிய சலுகைகள்,நெகிழ்வான வேலை ஏற்பாடு மற்றும் தரமான குழந்தைப் பராமரிப்பு வசதி என்பனவும் வழங்கப்பட வேண்டும்.
குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு குடும்பங்களைக் கோருவதற்கு முன்னர்,அந்த குழந்தைகளை பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் வளர்க்கக்கூடிய சமூகச்சூழலை அரசு உருவாக்க வேண்டும். குடும்பங்களின் நம்பிக்கை அதிகரிக்கும் போது பிறப்புகளின் எண்ணிக்கையும் இயல்பாக அதிகரிக்கும்.
எனவே ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையைத் தாண்டி, அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெற்றோர்களைப் பாதுகாக்கும் ஒருங்கிணைந்த தேசிய குடும்ப நல கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.





