உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்கள் விசாரணைகளை திசைத்திருப்ப இனவாத சக்திகள் முயற்சி - ரிசாட்
இன்று குண்டுத்தாக்குதலின் உண்மை வெளிவார கூடாது என்று சகல இனவாத சக்திகளும் ஒன்றிணைந்துள்ளன.
சுரேஸ் சலே தான் நிரபராதி என்றால் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி நீதிமன்றத்தின் ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து விசாரணைகளை திசை திருப்புவதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட கூடாது. விசாரணை அதிகாரிகளை மாற்றுமாறு குறிப்பிட கூடாது. அவ்வாறு குறிப்பிடுவது சிறுப்பிள்ளைத்தனமானது. ஒருசில இனவாத சக்திகள் விடுக்கும் சில்லறைத்தனமான அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் அடிபணியக் கூடாது. விசாரணைகளை தடையின்றி முன்னெடுக்க வேண்டும். உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 11-06-2026 அன்று நடைபெற்ற அமர்வின்போது ''வலுசக்தி மற்றும் வாழ்க்கைச் செலவுப் பாதுகாப்புத் திட்டம்'' தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் இன்றுவரை நீங்காத வலியாகவே காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்கள் தமக்கு நீதி கோரி எதிர்பார்ப்புடன் போராடுகிறார்கள். இந்த தாக்குதல்களால் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த முஸ்லிம் மக்களும் உண்மை வெளிவர வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த இனத்தின் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நீக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளார்கள்.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணை விரிவுப்படுத்தப்பட்டு நாளுக்கு நாள் நீதிமன்றம் ஊடாக புதிய விடயங்கள் வெளிவருகின்ற நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்கள் ஒருசிலர் கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக சலேவுக்காக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.இது துரதிர்ஷ்டவசமான செயற்பாடு.
சுரேஸ் சலே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி, முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்து, விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவர் நீதிமன்றத்தின் ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள வேண்டும். தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும்.அதனை விடுத்து சிறையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட கூடாது. அவ்வாறு குறிப்பிடுவது சிறுப்பிள்ளைத்தனமானது.
விசாரணை நடவடிக்கைகளை திசை திருப்பும் வகையில் தான் சுரேஸ் சலே செயற்படுகிறார். இந்த நாட்டின் இனவாத சக்திகளான விமல் வீரவன்ச,உதய கம்மன்பில ஆகியோர் கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு, சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டு நாட்டின் முரண்பாடுகளை ஏற்படுத்தவே முயற்சிக்கிறார்கள்.
கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துக் கொண்ட தேரர் ஒருவர் ' சுரேஸ் சலே ஒரு முஸ்லிமாக இருந்தாலும் அவருக்காக நாங்கள் குரல் கொடுப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார். ஜமாத்தே இஸ்லாம் அமைப்பின் தலைவர்,சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா,அசாத் சாலி , அஹ்னாப் ஜசீம், ஆகியோரும் முஸ்லிம்கள் தான் இவர்கள் கடந்த காலங்களில் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டு வருடக்கணத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்களுக்காக தேரர்களும், இனவாத சக்திகளும் குரல் கொடுக்கவில்லை.
நானும், எனது சகோதரரும் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்.எமக்கு ஆதரவாக பலர்குரல் கொடுத்தார்கள். இருப்பினும் நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இனவாத சக்திகளை ஒன்றிணைக்கவில்லை.ஆனால் இன்று குண்டுத்தாக்குதலின் உண்மை வெளிவார கூடாது என்று சகல இனவாத சக்திகளும் ஒன்றிணைந்துள்ளன.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் விரைவுப்படுத்த வேண்டும்.இனவாதிகளின் சில்லறைத்தனமான அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கம் அடிபணிய கூடாது.உண்மையை இலங்கை மட்டுமல்ல, முழு உலகமும் எதிர்பார்த்துள்ளது என்றார்.





