அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல் - கூட்டு எதிர்க்கட்சி கண்டனம்
திறைசேரிச் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவின் வீட்டுக்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ஏவிவிடப்பட்ட வன்முறைகளை நாங்கள் மிகுந்த அருவருப்புடனும் கோபத்துடனும் கண்டிக்கிறோம்.
நாட்டின் தேசிய வளங்கள் மற்றும் மக்களின் வரிப்பணம் சூறையாடப்படுவதை அம்பலப்படுத்தக் கோரி, திறைசேரிச் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவின் இல்லத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட அருவருக்கத்தக்க தாக்குதல்களை கூட்டு எதிர்க்கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீது மலக்கழிவுகள் மற்றும் எரியும் பட்டாசுகளை வீசி ஏவிவிடப்பட்ட இந்த வன்முறையானது, உண்மைகளை மறைப்பதற்கான ஜே.வி.பி-யின் மிலேச்சத்தனமான முயற்சி எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி, இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மக்கள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்றும் விடுத்துள்ள விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பெலவத்தையில் அமைந்துள்ள திறைசேரிச் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவின் வீட்டுக்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ஏவிவிடப்பட்ட வன்முறைகளை நாங்கள் மிகுந்த அருவருப்புடனும் கோபத்துடனும் கண்டிக்கிறோம்.
வறுமை தொடர்பாக ஜே.வி.பி தலைவர்களால் பரப்பப்படும் அப்பட்டமான பொய்கள் குறித்து கவனம் செலுத்துவது மக்களின் மறுக்க முடியாத உரிமையாகும். எமது நாட்டு மக்களுக்கு பில்லியன் கணக்கான பணத்தை இழக்கச் செய்து, திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்ட தொடர் மோசடிகள் தொடர்பாக ஜே.வி.பி-க்கு எதிராக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பாரதூரமான மற்றும் நம்பகமான குற்றச்சாட்டுகளின் பின்னணியில், இந்த எதிர்ப்பு நடவடிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த வகையில் இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கத்தக்கது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்கள் மீது பொறுத்தமற்ற பொருட்கள் வீசி எறியப்பட்டுள்ளன. தேசிய வளங்களைக் கொள்ளையடிப்பதையும், அக்கொள்ளைகளை அம்பலப்படுத்துவதையும் தடுப்பதற்காக, மிகவும் அருவருப்பான முறையிலான குண்டர் செயல்களையும் அச்சுறுத்தல்களையும் மக்கள் விடுதலை முன்னணி கையாண்டு வருவதை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
நூற்றுக்கணக்கான கொலைகள் மற்றும் அரச கட்டிடங்கள், பேருந்துகள், ரயில்கள், மின்மாற்றிகள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை அழித்த அவர்களின் காட்டுமிராண்டித்தனமான வரலாற்றை நோக்கும்போது, இத்தகைய செயற்பாடுகள் ஆச்சரியமளிப்பவை அல்ல. சட்டபூர்வமான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக பலத்தைப் பிரயோகிப்பதையும், நாட்டின் வளங்களைத் தண்டனையின்றித் திருடுவதற்கு ஏதுவான ஒரு அச்சமான சூழலை உருவாக்குவதையும் நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்.
மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் எமது பயணம், இவ்வாறான இழிவான தந்திரோபாயங்களினால் ஒருபோதும் மௌனிக்கப்படாது என்பதை மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் வலியுறுத்திக் கூறுகின்றோம்.





