தேஷபந்து தென்னகோன் உள்ளிட்டோர் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர்நீதிமன்றம் தீர்மானம்
விசேட விசாரணைப் பிரிவின் அன்றைய பொறுப்பதிகாரி நலின் ஸ்ரீயந்த ஆகியோர் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற 'அரகலய' போராட்டத்தின் செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பொது அக்காலப்பகுதியில், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய தேஷபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு (வடக்கு) விசேட விசாரணைப் பிரிவின் அன்றைய பொறுப்பதிகாரி நலின் ஸ்ரீயந்த ஆகியோர் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை 23-07-2026 அன்று நீண்ட விசாரணைக்கு உட்படுத்திய பின்னரே, உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் நீதியரசர் சோபித ராஜகருணா இந்த தீர்ப்பை தெரிவித்திருந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி கொழும்பு (வடக்கு) விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சிலர் தனது வீட்டிற்குள் நுழைந்து, தனது தனிப்பட்ட பொருட்களைப் பரிசோதித்ததுடன், தனது கடவுச்சீட்டையும் பொறுப்பேற்றதாக மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார். அதன்பின்னர் தனது கைபேசி, மடிக்கணினி, மின்னஞ்சல் கணக்கு மற்றும் சமூக ஊடகக் கணக்குகளைப் பரிசோதித்து, "GoHomeGota 2022" (கோ ஹோம் கோடா) பிரச்சாரம் தொடர்பான சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் 2022 ஏப்ரல் 3 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த அமைதி போராட்டம் குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்தியதாக மனுதாரர் தெரிவித்திருந்தார்.
மேலும் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றிய பதிவுகள் மூலம் அரசாங்கத்தை விமரிசித்தார் எனக் கூறி, எவ்வித நியாயமான காரணமுமின்றி பிரதிவாதிகளான பொலிஸார் தன்னைக் கைது செய்ததாகவும், முகத்துவாரம் குற்றப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட பல இடங்களுக்குக் கொண்டு சென்று சுமார் 24 மணி நேரம் தடுத்து வைத்திருந்து, 2022 ஏப்ரல் 3 ஆம் திகதி அதிகாலை கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திப் பிணையில் விடுவித்ததாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கமைய தன்னை சட்டவிரோதமாக கைது செய்தமைக்கு எதிராக அனுருத்த பண்டார உயர்நீதிமன்றில் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.





