கனடாவில் 23 வயது பஞ்சாப் பெண் கொலை
உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், ஜூலை 12 ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர், கனடாவின் எட்மன்டனில் உள்ள தனது வீட்டில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த இந்தியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த தமன்பிரீத் கவுர், சாம்ராலாவைச் சேர்ந்தவர். அவர் மாணவர் விசாவில் கனடாவுக்குச் சென்றிருந்தார்.
எட்மன்டன் காவல்துறை சேவை (EPS) வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூலை 9 ஆம் திகதி தென்கிழக்கு எட்மன்டனின் சில்வர்பெர்ரி பகுதியில் உள்ள வீட்டொன்றில் காயமடைந்த நிலையில் பதிலளிக்காத பெண் ஒருவர் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், ஜூலை 12 ஆம் திகதி உயிரிழந்தார்.
ஜூலை 14 ஆம் திகதி நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், கழுத்து நெரித்ததே மரணத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டதுடன், இது கொலை என மருத்துவப் பரிசோதகர் அறிவித்துள்ளார்.
22 வயதுடைய ரிதீஷ் குமார், ஜூலை 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இரண்டாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு நெருங்கிய துணையால் மேற்கொள்ளப்பட்ட கொலையாகக் கருதப்படுவதாகவும், மேலதிக சந்தேகநபர்கள் எவரும் தேடப்படவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





