உமா ஓயா திட்ட விவகாரம், வாக்குமூலம் வழங்க லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த மைத்திரிபால
இத்திட்டம் நிறைவடைய நீண்ட காலம் எடுத்தது. இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சில கொடுக்கல்வாங்கள் தொடர்பில் யாரோ முறைப்பாடு செய்துள்ளனர்.
உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.
ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, 28-04-2026 அன்று காலை 9.30 மணியளவில் ஆணைக்குழுவுக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதியிடம் அதிகாரிகள் , சுமார் மூன்று மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். அதன் பின்னர் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கையில், உமா ஓயா திட்டம் நிர்மாணிக்கப்படும் போது ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி கொடுக்கல்வாங்கல் குறித்த விடயங்கள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக லஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
உமா ஓயா திட்டம் பதுளையில் மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற போது, உமா ஓயா திட்டமானது ஒரு யுத்தம் நடக்கும் நாட்டைப் பொறுப்பேற்பதைப் போன்றதொரு பாரதூரமான நிலையிலேயே என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்காக ஆரம்பத்தில் ஈரான் அரசாங்கம் கடன் உதவிகளை வழங்கியது. எனினும் இடையில் ஈரான் மீது அமெரிக்கா தடைகளை விதித்தமையால், அமெரிக்க டொலர்களில் அந்த நிதியைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. ஈரான் பணத்தை அனுப்ப முடியாத நிலை உருவானதால், திறைசேரி பணத்தைக் கொண்டே திட்டத்தைத் தொடர வேண்டியிருந்தது.
இதனாலேயே இத்திட்டம் நிறைவடைய நீண்ட காலம் எடுத்தது. இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சில கொடுக்கல்வாங்கள் தொடர்பில் யாரோ முறைப்பாடு செய்துள்ளனர். அது குறித்த நிலைமைகளை வினவுவதற்காகவே என்னை அழைத்திருந்தார்கள். அதற்கமைய எனது வாக்குமூலத்தை வழங்கினேன். ஏதோ ஊழல் நடந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் உண்மையில் அதை ஊழல் என்று என்னால் சொல்ல முடியாது. ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், அது குறித்து பகிரங்க விசாரணை நடத்துவது சிறந்தது. விசாரணையின் மூலம் ஏதேனும் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டால், ஒருபுறம் அதனைச் சரிசெய்ய வேண்டும், மறுபுறம் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.





