சமஷ்டி அரசியலமைப்பை தாமதமின்றி உருவாக்குங்கள் - தமிழரசுக்கட்சியின் மேதினப் பிரகடனத்தில் வலியுறுத்து
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நீதிப்பொறிமுறையொன்று உடனடியாக நிறுவப்படவேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளின் பிரகாரம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையினை ஒழித்து, அதியுச்ச அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மேதினப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் 'தன்னாட்சி அதிகாரத்துக்காகவும், வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் ஒன்றிணைவோம்' எனும் மகுடத்தில் 01-05-2026அன்று பி.ப 3.30 மணியளவில் மாங்குளம் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அப்பிரகடனத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு: பொருளாதார நெருக்கடி, 'தித்வா' சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்தம் போன்ற காரணங்களினால் சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாவின் பெறுமதி வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாளாந்த சம்பளம் பெறுவோரின் ஊதியம் போதியளவால் அதிகரிக்கப்படவேண்டும்.
விவசாய உரம், எரிபொருள் போன்றவற்றுக்கான தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள சுயதொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவேண்டும்.
நிலக்கரி இறக்குமதி ஊழலினால் அதிகரிக்கும் மின்சாரக்கட்டணத்தை மின்சாரப் பாவனையாளர்களிடமிருந்து அறவிடாமல், ஊழலுக்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து வசூலிக்கவேண்டும்.
புதிய அரசாங்கத்திலும் இடம்பெறும் ஊழல் மோசடிகள் உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு, பொதுமக்களின் நிதியும் பொதுச்சொத்துக்களும் பாதுகாக்கப்படவேண்டும்.
நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத்தேர்தல் காலதாமதமின்றி இவ்வருடத்துக்குள் நடத்தப்படவேண்டும்.
பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படுவதுடன், இன்னமும் விடுவிக்கப்படாமல் இருக்கும் அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நீதிப்பொறிமுறையொன்று உடனடியாக நிறுவப்படவேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினராலும், தொல்பொருள், வனப்பாதுகாப்பு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றினாலும் கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளின் பிரகாரம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையினை ஒழித்து, அதியுச்ச அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். என்றுள்ளது.





