திருகோணமலையில் காணிகளை விடுவிப்பதற்கு திட்டம் - பிரதமர் ஹரணி
2021ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, திருகோணமலை மாவட்டத்தில் கைவிடப்பட்டிருந்த 210 குளங்களில் 15 குளங்கள் தற்போது புனரமைக்கப்பட்டிருக்கின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான 33,563 ஏக்கர் நிலப்பரப்பிலும், வனஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான 31,627 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமைந்துள்ள கடற்படைத் தலைமை பகுதி, பெரிய சோபர்,சிறிய சோபர், சேருவில அல்லாய், திரிகோணமடு மற்றும் புறாத் தீவு போன்ற பழைய பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பரிசோதிக்கப்பட்டு, 1985ஆம் ஆண்டிற்கு முன்னர் அங்கு வசித்த மக்களின் காணிகளை விடுவிப்பதற்கோ அல்லது மாற்றுக் காணிகளை வழங்குவதற்கோ நிலையான காணி நிர்வாக வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 08-07-2026அன்று நடைபெற்ற அமர்வின்போது பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: 2021ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, திருகோணமலை மாவட்டத்தில் கைவிடப்பட்டிருந்த 210 குளங்களில் 15 குளங்கள் தற்போது புனரமைக்கப்பட்டிருக்கின்றன. எஞ்சிய 195 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன. அதேபோன்று, கைவிடப்பட்டிருந்த 25 அணைக்கட்டுகளில் 08 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 17 அணைகள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளன.
இக்குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளின் புனரமைப்புப் பணிகள் தாமதமடைவதற்குக் பிரதான காரணம், வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் கீழ் இருந்துவந்த காணிகள்,கமநல அபிவிருத்தித் திணைக்களத்திடம் கையளிக்காமையும் தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காமையினாலுமே ஆகும். எதிர்காலத்தில் இப்பிரச்சினைகளைத் தீர்த்து, விவசாய நடவடிக்கைகளுக்காக இக்குளங்களை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் எல்லைகளுக்குள் அமைந்திருந்தமையால் விவசாயிகளினால் பயன்படுத்த இயலாதிருந்த 195 குளங்களையும் 17 அணைகளையும் விடுவித்து விவசாயிகளிடம் ஒப்படைப்பதற்கு உரிய பிரதேச செயலகங்கள் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
வன பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான 33,563 ஏக்கர் நிலப்பரப்பிலும், வனஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான 31,627 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமைந்துள்ள கடற்படைத் தளப்பகுதி,பெரிய சோபர்,சிறிய சோபர், சேருவில அல்லாய், திரிகோணமடு மற்றும் புறாத் தீவு போன்ற பழைய பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பரிசோதிக்கப்பட்டு, 1985ஆம் ஆண்டிற்கு முன்னர் அங்கு வசித்த மக்களின் காணிகளை விடுவிப்பதற்கோ அல்லது மாற்றுக் காணிகளை வழங்குவதற்கோ நிலையான காணி நிர்வாக வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது யாழ்ப்பாணம், வவுனியா,மன்னார், மட்டக்களப்பு, அனுராதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் இக் காணி விடுவிப்புச் செயற்பாட்டின் ஊடாக, அக் காணிகளை விவசாய மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களங்களின் ஊடாக நெற்செய்கைக்குப் பொருத்தமான வகையில் சீரமைத்து மக்களிடம் ஒப்படைப்பதன் மூலம், நாட்டின் அரிசி உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.





