நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் - கொழும்பு சட்ட சமூகம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு 04-07-2026 அன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள கொழும்பு சட்ட சமூகம், இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே எடுத்திருந்த நிலைப்பாட்டுக்கு அதன் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் வகையில் அரசியலமைப்பில் எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்ளவேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ள கொழும்பு சட்டச் சமூகம், இவ்வாறான நடவடிக்கைகள் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு 04-07-2026 அன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள கொழும்பு சட்ட சமூகம், இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே எடுத்திருந்த நிலைப்பாட்டுக்கு அதன் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
நீதி நிர்வாகத்துறைக்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் வழங்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் அதேவேளை, அரசியலமைப்பின் ஊடாக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஓய்வுபெறும் வயதெல்லையில் மாற்றங்களைச் செய்வதென்பது மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகப்படவேண்டிய விடயம் என்றும், இதனுடன் தொடர்புடைய சகல தரப்பினருடனான பரந்துபட்ட ஆலோசனைகளின் பின்னரே அதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் கொழும்பு சட்ட சமூகம் அதன் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
அதேபோன்று 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை மாற்றமின்றி இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவ்வமைப்பு, எனவே தற்போது அதனை சேவையில் உள்ள நீதிபதிகளைப் பாதிக்கும் வகையில் மாற்றுவதென்பது நீதித்துறையின் சுயாதீனத்துவம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை என்பன மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும் என எச்சரித்துள்ளது.
மேலும் இவ்விவகாரம் தொடர்பில் விசேட கவனம்செலுத்துமாறும், உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்குரிய அரசியலமைப்புத் திருத்தம் எதனையும் மேற்கொள்ளவேண்டாம் என்றும் கொழும்பு சட்ட சமூகம் அதன் கடிதத்தின் வலியுறுத்தியுள்ளது.





