தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் - இலங்கை மத்திய வங்கி
தேவையேற்படும் பட்சத்தில் எந்தவொரு வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கும் நாம் தயாராக இருக்கிறோம்' என்றும் மத்திய வங்கி உத்தரவாதமளித்துள்ளது.
தேசிய அபிவிருத்தி வங்கியில் இடம்பெற்ற உள்ளக மோசடி குறித்து முன்னெடுக்கப்பட்டுவரும் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கி, வாடிக்கையாளர்களின் கணக்குகள் மற்றும் வைப்புக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உத்தரவாதமளித்துள்ளது.
தேசிய அபிவிருத்தி வங்கியில் சுமார் 13.2 பில்லியன் ரூபா பெறுமதியான பாரிய உள்வாரி மோசடி ஒன்று இடம்பெற்றிருப்பதாகவும், முன்னைய மதிப்பீடுகளை விடவும் இந்த மோசடித் தொகை மிக அதிகமாகும் எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தது.
இந்நிலையில் அந்த உள்ளக மோசடி குறித்து முன்னெடுக்கப்பட்டுவரும் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தாம் தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்துவருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
'இதுவரை மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி தேசிய அபிவிருத்தி வங்கி குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு மேலதிகமான மூலதனத்துடனும், போதிய திரவத்தன்மை மட்டங்களுடனும் தொடர்ந்து இயங்குகின்றது' என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமாத்திரமன்றி இந்த மோசடியானது வாடிக்கையாளர் கணக்குகள் அல்லது வைப்புக்கள் மீது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், அவை பாதுகாப்பாக இருப்பதாகவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 'தேசிய சேமிப்பு வங்கியுடனும், ஏனைய சம்பந்தப்பட்ட ஆர்வலர்களுடனும் நெருக்கமான தொடர்பு பேணப்பட்டுவருகிறது. அவ்வங்கியின் உறுதிப்பாட்டினை பாதுகாப்பதற்கும், வைப்பாளர்களின் நலவுரித்துக்களைப் பாதுகாப்பதற்கும் தேவையேற்படும் பட்சத்தில் எந்தவொரு வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கும் நாம் தயாராக இருக்கிறோம்' என்றும் மத்திய வங்கி உத்தரவாதமளித்துள்ளது.





