முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை விசாரியுங்கள் - ரவிகரன் எம்.பி.
செம்மணி மனிதப்புதைகுழியுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படவேண்டும்.
மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகவே இந்த விடயம் தொடர்பில் அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 08-07-2026அன்று நடைபெற்ற கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்னிடம் கேட்டுக்கொண்டதான தகவல்களை சோமரத்ன ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளார்.
அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளேவினால் சிறைச்சாலை அதிகாரி ஒருவர்மூலம் கடிதம் ஒன்று தமக்கு அனுப்பி வைத்திருந்ததாகவும், அந்தக் கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவே அனுப்பி வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனிதப் புதைகுழி தொடர்பில் எதனையும் கூறவேண்டாமெனவும், பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே சோமரத்ன ராஜபக்ச வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றுதான் செம்மணியோடு சார்ந்த மக்கள் எல்லோரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
செம்மணி மனிதப்புதைகுழியுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படவேண்டும். அவர்களுக்கெதிராக மிகக்கடுமையான நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இவ் உயரிய சபையின் ஊடாகக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.





