சகல தமிழ் கட்சிகளும் தற்போது ஒருமித்த நிலைப்பாட்டில் - எம்.ஏ.சுமந்திரன்
சமஷ்டியும், அரசியலமைப்பு சீர்த்திருத்த வழிமுறைகளும் என்ற தலைப்பில் உரையாற்றுவதற்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை தந்தை செல்வா அறக்கட்டளை அழைத்திருப்பது முக்கியமானதொரு தருணமாகும்.
முதலாம் குடியரசு அரசியலமைப்பு யாப்பு உருவாக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நாட்டில் இருந்து, நாட்டின் தேசிய வாழ்க்கையில் இருந்து நாங்கள் விலக்கப்பட்ட போதுதான் தனியுரிமைக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது. உள்ளக சுயநிர்ணய உரித்தை உபயோகிக்க வேண்டும் என்பதில் அனைத்து தமிழ் கட்சியினரும் தற்போது ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனர் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு 26-04-2026 அன்று யாழ் மத்திய கல்லூரி தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: தந்தை செல்வாவின் 49 ஆவது நாள் நினைவு நாளை நினைவு கூரும் போது அவரை தமிழ் தேசத்தின் தந்தை என்றே குறிப்பிடுகிறோம். முக்கியமான காரணத்தால் தான் நாங்கள் அவரை தமிழ் தேசத்தின் தந்தை என்று அழைக்கிறோம். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தேசிய இனமாகவே சர்வதேச சட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.
தமிழில் வெறுமனமே மக்கள் என்று குறிப்பிடப்படுவதால் அதன் முக்கியத்துவம் உணராமல் இருக்கிறது. தேசம் என்று குறிப்பிடப்படும் போது எமக்கு 'சுயநிர்ணய உரிமை' உண்டு என்ற எண்ணக்கருவை தந்தை செல்வா ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தினார்.அதனால் தான் அவர் ' தந்தை செல்வா' என்று அழைக்கப்படுகிறார்.
சுயநிர்ணய உரிமை உண்டு என்ற எண்ணம் விதைக்கப்பட்ட நாளிலிருந்து தமிழ் மக்கள் அதே எண்ணப்பாடுடன் இருக்கிறார்கள், வாழ்கிறார்கள்.அந்த உரிமையை எவ்வாறான வகையில் உபயோகிக்க வேண்டும் என்பது பற்றி வேறு வேறு காலக்கட்டங்களில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.ஒரு சமஷ்டி கட்டமைப்பில் தான் எமது சுயநிர்ணய உரித்தை உபயோகிக்கலாம் என்பது ஆரம்பக்காலத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் சமஷ்டி கட்டமைப்பில் சுயநிர்ணய உரித்தை வெளிக்கொணரலாம் என்று குறிப்பிடப்பட்ட போதிலும், 1970 மற்றும் 1976 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அது வெளியக சுய நிர்ணயாக, ஒரு தனி நாடாக இருக்க வேண்டும் என்று பிரகடனம் செய்யப்பட்டது.
1972.05.22 ஆம் திகதியன்று முதலாம் குடியரசு அரசியலமைப்பு யாப்பு உருவாக்கப்பட்டது.இந்த நாட்டில் இருந்து, நாட்டின் தேசிய வாழ்க்கையில் இருந்து நாங்கள் விலக்கப்பட்ட போதுதான் தனியுரிமைக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது. உள்ளக சுயநிர்ணய உரித்தை உபயோகிக்க வேண்டும் என்பதில் அனைத்து தமிழ் கட்சிகளும் தற்போது ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளன.
சமஷ்டியும், அரசியலமைப்பு சீர்த்திருத்த வழிமுறைகளும் என்ற தலைப்பில் உரையாற்றுவதற்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை தந்தை செல்வா அறக்கட்டளை அழைத்திருப்பது முக்கியமானதொரு தருணமாகும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிகாலத்தில் கலாநிதி நீலன் திருச்செல்வத்துடன் இணைந்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் முக்கியமான ஆவணத்தை தயாரித்தார்.ஒரு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நோக்கி அதாவது உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் ஆராய்வார்கள் என்பது ஒஸ்லோவில் எடுக்கப்பட்ட ஒரு இணக்கப்பாடாகும். அதில் இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவின் தலைவராக ஜி.எல்.பீரிஸ் பதவி வகித்தார்.இன்றைய உரை நீண்டகாலத்துக்கு தொடர்ச்சியானதாக அமையும் என்று குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.





