நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் - சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்
கைதிகள் இரும்பு கதவை உடைத்துக் கொண்டு பெறுமதிமிக்க உபகரணங்கள் உள்ள பகுதியைத் தாண்டி மரக் கதவை நோக்கியும் முன்னேறி வந்தனர்
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக முன்கூட்டியே எவ்வித உத்தியோகப்பூர்வப் புலனாய்வு எச்சரிக்கைகளோ அல்லது விசேட தகவல்களோ கிடைக்கப் பெறவில்லை. எவ்வாறிருப்பினும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட சுயாதீனக் குழுவின் விசாரணை உட்பட, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட நான்கு தரப்பினர் மூலம் தனித்தனியான பல மட்ட விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 07-07-2026அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில்,
புலனாய்வு அறிக்கை என்று கூறப்படுவது எப்போதுமே கிடைக்கக்கூடிய ஒன்றுதான், அது போன்ற அறிக்கைகள் பொதுவாகக் கிடைக்கும். அதற்குத் தேவையான ஏற்பாடுகளை நிறுவன ரீதியாக நாங்கள் செய்திருந்தோம். அதாவது கைதிகளுக்கு இடையே எவ்வித அசம்பாவிதமும் அல்லது அமைதியின்மையும் ஏற்படாத வகையில் தேவையான பாதுகாப்புக்காக எமது அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். உண்மையில் எமது அதிகாரிகள் அவ்வாறு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காரணத்தினால்தான், ஏற்பட்ட இந்த உயிர் மற்றும் உடைமைச் சேதங்களின் அளவைக் கணிசமாகக் குறைத்துக் கொள்ள முடிந்தது.
ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில்தான் இந்த பிரச்சினை முதன்முதலில் உருவானது. ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பிரச்சினை பின்னர் சமரசத்திற்கு கொண்டுவரப்பட்டது. திங்கட்கிழமை தான் இந்தப் பிரச்சினை மீண்டும் ஒரு பெரிய மோதலாக மாறியது. ஞாயிற்றுக்கிழமை மாலையாகும் போது இந்த நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, கைதிகள் அனைவரும் அவரவர் சிறைக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டு, அவை பூட்டப்பட்டிருந்தன. அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டு அந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டிருந்தன.
அதன் பின்னர் மறுநாள் காலையில், அதாவது திங்கட்கிழமை என்பது நீதிமன்றக் கடமைகள் உள்ள ஒரு நாளாகும். அதேபோன்று சிறைக்கைதிகளின் உறவினர்கள் அவர்களை நேரில் வந்து சந்திப்பதற்கான ஒரு நாளுமாகும். அந்த நேரத்தில் நீதிமன்றக் கடமைகளுக்காக, குறிப்பாகப் பிணை பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றங்களுக்கு ஆஜர்படுத்தப்பட வேண்டிய கைதிகள் ஒரு குழுவினர் அங்கு தயாராக இருந்தார்கள். அது போன்ற பல வழமையான கடமைகள் அங்கு காணப்பட்டன. எனவே அவர்களுக்கு காலை உணவை வழங்கிவிட்டு, இந்த வழமையான கடமைகளை ஆரம்பிப்பதற்காகவே அதிகாரிகள் அந்த வளாகத்திற்குள் பிரவேசித்தார்கள்.
அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் கைதிகள் சிலர் ஏற்கனவே மருந்தகத்திலுள்ள மருந்துகளை உட்கொண்டு மிகவும் நிலைதடுமாறிய நிலையில் இருந்ததாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. அந்த கைதிகளுக்கு இடையே மீண்டும் இந்த மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனைச் சமரசம் செய்வதற்காக எமது அதிகாரிகள் தங்களின் வழமையான கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் போதே அந்த இடத்திற்கு விரைந்தார்கள்.
சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இடையே அசம்பாவிதங்கள் அல்லது அமைதியின்மை ஏற்படுவது அவர்களுக்குத் தேவையான வசதிகள் கிடைக்காமல் போகும் போதுதான். குறிப்பாக அவர்கள் தங்களின் உறவினர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் உறவினர்கள் வந்து சந்திக்கும் நாட்கள் அல்ல. எனவே அந்த ஒரு மன அழுத்தம் அவர்களிடம் காணப்பட்டது. ஆனால் அவர்களுக்கு அந்தச் சலுகைகளை வழங்க வேண்டிய தேவை அவர்களுக்கும் இருந்தது, அதிகாரிகளுக்கும் இருந்தது. அதேபோன்று அவர்களை நீதிமன்றக் கடமைகளுக்காகவும் ஆஜர்படுத்த வேண்டியிருந்தது. எனவே அந்த வழமையான கடமைகளைச் சுமுகமாக முன்னெடுப்பதற்கே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து முழுமையான மற்றும் சுயாதீனமான விசாரணை ஒன்றை நடத்துவதற்காக மூன்று பேர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மைகளைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தச் சுயாதீனக் குழுவின் விசாரணைகளுக்கு மேலதிகமாக, தற்போது பல மட்டங்களில் தனித்தனி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு பொலிஸார், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகிய நான்கு தரப்பினரும் இந்தச் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்துத் தனித்தனியாகப் விசாரணை செய்து வருகின்றனர். இந்த அனைத்து விசாரணைகளினதும் முடிவுகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலேயே, சிறைச்சாலைக்குள் உண்மையில் என்ன நடந்தது என்ற முழுமையான பின்னணியும் சூழ்நிலைகளும் துல்லியமாக வெளிப்படுத்தப்படும்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தைப் பொறுத்தமட்டில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இப்படியொரு பாரிய வன்முறை அல்லது மோதல் வெடிக்கக்கூடும் என்பது குறித்து எங்களுக்கு முன்கூட்டியே எவ்விதமான புலனாய்வுத் தகவல்களோ அல்லது எச்சரிக்கைகளோ கிடைக்கப் பெறவில்லை. பொதுவாகக் கிடைக்கக்கூடிய வழமையான தகவல்களுக்கு அப்பாற்பட்டு, இவ்வாறானதொரு அசம்பாவிதம் திட்டமிடப்படுவதாக எந்தவொரு உத்தியோகப்பூர்வப் புலனாய்வுப் பிரிவும் எங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கவில்லை என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த துரதிர்ஷ்டவசமான சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல கைதிகள் மற்றும் அதிகாரிகள் இன்னும் பல்வேறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 சிறைச்சாலை அதிகாரிகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடமையின் போது உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கான இழப்பீடுகள் மற்றும் கைதிகளின் மரணங்கள் குறித்த சட்ட ரீதியான மரண விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சிறை அதிகாரி ஒருவர் கதவு வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவுகின்றது. கைதிகள் இரும்பு கதவை உடைத்துக் கொண்டு பெறுமதிமிக்க உபகரணங்கள் உள்ள பகுதியைத் தாண்டி மரக் கதவை நோக்கியும் முன்னேறி வந்தனர். கைதிகளின் மோதல்களைத் தடுக்கச் சென்ற பல சிறை அதிகாரிகள் உள்ளே சிக்கித் தாக்குதலுக்குள்ளான நிலையில், கைதிகள் மரக் கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே தப்பியிருந்தால் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பாரிய அழிவை மதிப்பிடவே முடியாது. எனவே, தப்பியோட முயன்ற கைதிகளைக் கட்டுப்படுத்தி, மேலும் ஒரு பெரும் பேரழிவு ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே வேறு வழியின்றி அந்த அதிகாரி உயிரைப் பணையம் வைத்து அத்தகைய துப்பாக்கிச் சூட்டை நடத்த வேண்டியிருந்தது. சிறைச்சாலையிலிருந்த பெண் கைதிகளுக்கோ, வெளிநாட்டு கைதிகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் பாதுகாப்பாக பிரத்தியேகமான அறைகளில் உள்ளனர் என்றார்.





