மார்ச் மாத இறுதியில் எரிபொருள் கட்டணங்கள் திருத்தப்படாது
வாகனமல்லாத அடிப்படையில் எரிபொருள் கோட்டாவை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியவுடன் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமை இரத்துச் செய்யப்படும். மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கிராம சேவகர் அல்லது பிரதேச பிரிவுகள் ஊடாக கோட்டா முறைமை விநியோகிக்கப்படும். கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்கள் அடுத்த மாதம் முதல் தொடர்ச்சியாக நாட்டுக்கு வருகைத்தரும். மார்ச் மாத இறுதியில் எரிபொருள் கட்டணம் திருத்தப்படாதென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.எஸ்.ராஜகருண தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 28-03-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, மத்திய கிழக்கில் மோதல் நிலை தோற்றம் பெற்றவுடன் எரிபொருள் தட்டுப்பாடு என்ற அச்சத்தில் மக்கள் தேவைக்கு மேலதிகமாக எரிபொருளை மார்ச் முதல் வாரத்தில் கொள்வனவு செய்தார்கள்.
இக்காலப்பகுதியில் வழமைக்கு மாறாக 57 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல், 47 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ள.இதனால் தான் மார்ச் மாதம் 10 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.
எரிபொருள் விநியோக கட்டமைப்பை உறுதியாக பேணுவதற்காகவே கோட்டா (க்யூ.ஆர்) முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு,கடந்த 22 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.
மாதாந்த எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கமைய இந்த மாதம் இறுதி பகுதியில் எரிபொருள் விலையை திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை உறுதியாக குறிப்பிட்டுக்கொள்கிறோம்.
ஒற்றை மற்றும் இரட்டை இலக்க அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. வரிசையை குறைப்பதற்காகவே இந்த முறைமை அமல்படுத்தப்பட்டது.
தற்போது எரிசை சற்று குறைவடைந்துள்ளது. எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியவுடன் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமை இரத்துச் செய்யப்படும்.
கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்கள் நாட்டுக் தொடர்ச்சியாக வருகைத்தரவள்ளன. ஏப்ரல் மாதம் தொடர்ச்சியாக எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வருகைத்தரவள்ளன.
இந்த எரிபொருள் கப்பல்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஜூன் மாதம் வரை எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது.
வாகனமல்லாத அடிப்படையில் எரிபொருள் கோட்டாவை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கிராம சேவகர் அல்லது பிரதேச பிரிவுகள் ஊடாக இதற்கான கோட்டா முறைமை விநியோகிக்கப்படும்.
மின்சார உற்பத்திக்கும், விமான போக்குவரத்துக்கும் தேவையான எரிபொருள் கையிருப்பில் போதுமானதாக உள்ளது. வறட்சியான காலநிலை தீவிரமடைந்துள்ளதால் எரிபொருள் ஊடாக மின்னுற்பத்திக்கு அதிக எரிபொருளை விநியோகிக்க வேண்டியுள்ளது.
கடுமையான தீர்மானங்களை எடுத்ததால் தான் எரிபொருள் விநியோக கட்டமைப்பு தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகம் மற்றும் கோட்டா முறைமை அமல்படுத்தப்பட்ட போது எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு பதிலளிக்க போவதில்லை என்றார்.





