தெற்கு கடற்பரப்பில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
குறித்த படகுகளிலிருந்து மீட்கப்பட்ட பொதிகளிலிருந்து 600 கிலோகிராமுக்கும் அதிகளவான ஹெரோயின் மற்றும் ஐஸ் ஆகிய போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகக் கடற்படை உறுதிசெய்திருந்தது.
தெற்கு ஆழ்கடலுக்கப்பால் கடற்படையினரால் சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகிலிருந்து 48 பொதிகளில் இருந்த 600 கிலோகிராமுக்கும் மேற்பட்ட சுமார் 10 பில்லியன் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
அத்தோடு மேற்படி போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிபுரியும் நோக்கத்துடன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு மீன்பிடிப் படகு, ரி-56 ரகத் துப்பாக்கி உள்ளிட்ட 11 துப்பாக்கிகளுடன் 10 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டு 12-03-2026 அன்று கரைக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.
இலங்கைக்குச் சொந்தமான மேற்படி ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் நாட்டின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் ஆழ்கடலில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டன.
கடற்படை புலனாய்வுப் பிரிவு வழங்கியிருந்த தகவலுக்கமைய கடற்படையின் நீண்ட தூர கப்பல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து ஆழ்கடலில் வைத்து, சந்தேகத்திற்கிடமான மீன்பிடிப் படகுகளைக் கைது செய்திருந்தனர்.
கடற்படையினரின் இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, 5 சந்தேகநபர்களும், போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடிப் படகும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து அதே கடற்பகுதியில் நடத்தப்பட்ட மேலதிக தேடுதலின் போது, மேற்படி போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிபுரிவதற்காகப் பயணித்த மற்றொரு மீன்பிடிப் படகும், 5 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினரால் ஆழ்கடலில் வைத்துப் பொறுப்பேற்கப்பட்ட குறித்த இரண்டு மீன்பிடிப் படகுகளும் அதிலிருந்த 48 பாரிய போதைப்பொருள் பொதிகளும் மேலதிக விசாரணைகளுக்காக திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டன.
குறித்த படகுகளிலிருந்து மீட்கப்பட்ட பொதிகளிலிருந்து 600 கிலோகிராமுக்கும் அதிகளவான ஹெரோயின் மற்றும் ஐஸ் ஆகிய போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகக் கடற்படை உறுதிசெய்திருந்தது. மேலும் குறித்த படகுகளும் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையிடப்பட்டன.
தற்போது கைப்பற்றப்பட்டுள்ள இந்த பாரியளவான போதைப்பொருள் சுமார் 10 பில்லியன் ரூபா பெறுமதிமிக்கது எனப் பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவான ஆயுதங்களும் இதன்போது அதிகாரிகளால் மீட்கப்பட்டிருந்தன.
அதற்கமைய 2 ரி-56 ரகத் துப்பாக்கிகள், ஒரு எம்-16 ரகத் துப்பாக்கி, 8 கைத்துப்பாக்கிகள் உள்ளடங்களாக 11 துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருந்தன. செய்மதித் தொழில்நுட்பத்தால் இயங்கக் கூடிய தொடர்பாடல் கருவியும் கைதானவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு கரைக்கு அழைத்துவரப்பட்ட படகிலிருந்த சந்தேகநபர்களிடமும் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆரம்பக்கட்ட விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குறித்த போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
மேலும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் இந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நேற்றைய தினம் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





