ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை; சிறிதரன் எம்.பி.
கடந்த அரசாங்கங்கள் நியாயமாக நடக்கவில்லை. ஜனநாயகம் பேணப்படவில்லை.
ஆட்சி மாறினாலும், காட்சி மாறான நிலையே காணப்படுகிறது. நாட்டில் இப்போதும் இன ரீதியான வன்முறையும், இன ரீதியான பாகுபாடு மற்றும் நல்லிணக்கமற்ற தன்மையும் மேலோங்கி இருக்கிறது என்பதற்கு நீலகாமம் சம்பவமும், எழுத்தாளர் தீபச்செல்வனின் புத்தகங்கள் தடுக்கப்பட்டுள்ளமையும் சிறந்த உதாரணங்களாகும்.கடந்த கால ஆட்சியின் இனவாத போக்கை இந்த அரசாங்கமும் கடைப்பிடிக்க கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 05-05-2026 அன்று நடைபெற்ற கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: இரத்தினபுரி மாவட்ட நீலகாமம் தோட்டத்தில் இராணுவத்தில் இருந்து விலகிய கூலிக்காக அமர்த்தப்பட்ட காடையர்களால் அங்கிருந்த பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த நாட்டில் அரசாங்கங்கள் மாற்றமடைகின்ற, போது பல தலைவர்கள் மாறுகின்றனர். ஆனால் மலையக மக்கள் தங்களுக்கென சொந்த நிலமின்றி இன்றும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு சின்ன கொட்டிலை அமைப்பதற்குக்கூட இந்த நாட்டில் உரிமையில்லை என்பதனையே நீலகாமத்தில் நடந்த விடயம் சர்வதேச சமுகத்தின் பார்வைக்கு வந்துள்ளது.
உலகத்தில் மனிதர்களின் முன்னேற்றம் தொடர்பில் பேசகின்றோம். ஆனால் 200 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் பொருளாதாரத்தை வளர்த்து, நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் மலையக தமிழ் உறவுகளின் சிறு வீடு அமைப்பதில் எந்த அரசாங்கம் வந்தாலும் இதுதான் நிலைமை என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
கிளிநொச்சி மண்ணில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் தீபச் செல்வனின் புத்தகங்கள் இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவரின் பயங்கரவாதி மற்றும் சயனைட் போன்ற நூல்கள் விடுவிக்கப்பட்டுள்ள போதும், எழுத்துக்கள் மூலம் நான் போராடுகின்றேன்.இன்னும் இங்கு இரண்டு தேசங்கள் உள்ளன என்ற நூல்களுக்காக அவரின் நாவல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த தேவை ஏன் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. எழுத்துரிமை ஏன் தடுக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் மீது வலிந்த யுத்தத்தை நடத்தி அந்த யுத்தத்தை நியாயப்படுத்தும் கோதாபயவை புகழ்ந்து பாடிய புத்தகங்கள் இந்த நாட்டில் தாராளமாக உலாவருகின்றன. கொலைகளை நியாயப்படுத்தி எழுதினால் அவை உலாவருகின்றன. ஆனால் தீபச்செல்வன் போன்ற தமிழர்களினன் உண்மைகளை வெளியில் கொண்டு வந்தவர்களின் ஐந்து வகையான 320 புத்தக பிரதிகள் சுங்க பிரிவில் தடுத்து வைக்கப்பபட்டுள்ளன என்றால் உங்களின் அரசு காலத்திலும் எழுத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
கடந்த அரசாங்கங்கள் நியாயமாக நடக்கவில்லை. ஜனநாயகம் பேணப்படவில்லை. சுதந்திரம் வழங்கப்படவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றீர்கள். ஆனால் இதே அரசாங்கமும் இதே பாணியை மேற்கொள்கின்றது என்பது தீபச் செல்வனின் புத்தக விடயத்தில் தெளிவாக தெரிகின்றது. கலாச்சார அமைச்சின் இலக்கிய குழுவும், பாதுகாப்பு அமைச்சும் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் விடுவிக்ககப்படாது என்ற தோரணையில் சுங்கப்பிரிவில் இந்த புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. எழுத்து சுதந்திரம், இவரின் எழுத்துக்கள் வெளியான சர்வதேச ஊடகத்தின் கண்ணியத்தையும் இது பாதித்துள்ளது.
இந்த நாட்டில் மலையக நீலகாமம் தோட்டத்தில் நடந்த மோசமான வன்முறையும், இப்போதும் இந்த நாட்டில் இன ரீதியான வன்முறை மற்றும் பாகுபாடும் மற்றும் நல்லிணக்கமற்ற தன்மையும் மேலோங்கி இருக்கின்றன என்பதற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.
தையிட்டி விகாரையை அகற்ற முடியாது, தனியாரின் தமிழர் காணிகளில் வலுக்கட்டாயமாக அமைத்து வைத்துக்கொண்டு அவர்களின் நிலங்களை வழங்க விடாமல் தடுத்து வைத்துள்ள அரசாங்கம், நீலகாமம் தோட்டத்தில் தனியாக கொட்டில் அமைத்து தாம் உறங்குவதற்கு அனுமதிக்காத அரசாங்கம் மற்றும் தீபச்செல்வனின் புத்தகத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்காத அரசாங்கம் என்ன ஜனநாயகத்தை கூறப்போகின்றது.
இந்த அரசாங்கத்தின் காலமும் கடந்த அரசாங்கங்களை போன்று இனங்களை மதிக்கத் தெரியாத சகிப்புத் தன்மையற்ற அரசாங்கமாக இருக்கப் போகின்றீர்களா? கடந்த காலங்களை பார்த்தாவது தவறுகளை திருத்திற் கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.





