கண்டியில் 15 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகம் - பிக்கு உட்பட இருவர் கைது
சிறுமியொருவர், அவரது தந்தையின் சகோதரரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
கண்டி, பஹிரவகந்த பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
15 வயது மற்றும் 10 மாதங்கள் மதிக்கத்தக்க சிறுமியொருவர், அவரது தந்தையின் சகோதரரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, கடந்த மே 20 ஆம் திகதி அன்று பஹிரவகந்த பகுதியில் வைத்து பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 25 வயதுடையவர் எனவும், அவர் பஹிரவகந்த பகுதியிலுள்ள விகாரையொன்றில் தங்கியிருந்த பிக்கு எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் 29 வயதுடைய பஹிரவகந்த பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் அன்றைய தினமே அதே பகுதியில் வைத்து பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பிக்கு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஆகிய இருவரும் கடந்த 21 ஆம் திகதி கண்டி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, பிரதான சந்தேகநபரான பிக்குவை 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அதேவேளை, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேகநபரான பெண்ணை தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





