வலுசக்தி அமைச்சரும் செயலாளரும் இராஜினாமா
இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையில் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே அமைச்சரும் செயலாளரும் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்..
நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு இடமளிப்பதற்காக பதவி விலகுவதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் ஜனாதிபதிக்கு தமது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
நிலக்கரி இறக்குமதி மற்றும் அது சார்ந்த மின்சார உற்பத்தியில் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 17-04-2026 அன்று விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையில் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே அமைச்சரும் செயலாளரும் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்..
ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
'நிலக்கரி விநியோகம் தொடர்பாக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க எடுத்த தீர்மானத்தையும், 2009ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்த முறைப்பாட்டையும் பாராட்டுகிறேன். இது ஊழலுக்கு எதிராகவும் மக்கள் ஆணையை பாதுகாக்கவும் ஜனாதிபதி கொண்டுள்ள துணிச்சலான உறுதியை வெளிப்படுத்துகிறது.'
மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகள் மிகவும் சுதந்திரமாகவும், எவ்வித பக்கச்சார்புமின்றியும் நடைபெற வேண்டும். விசாரணைகள் இடம்பெறும்போது தான் அந்தப் பதவியில் நீடிப்பது விசாரணைக்கு தடையாக அமையலாம் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் இன்று (நேற்று) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளேன்'
அதேபோல் வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தனது கடிதத்தில், முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்கவும், விசாரணைகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் தான் வகிக்கும் செயலாளர் பதவியில் இருந்து விலகுவது பொருத்தமானது என தான் கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.





