கொடைகளின் பின்னால் பூகோள அரசியல்
இலங்கை இராணுவத்திற்குப் போராயுதங்களை வழங்கித் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதைத் தவிர்த்து, பொலிஸ் துறைக்கு வாகனங்களை வழங்குவதன் மூலம் இலங்கையின் உள்நாட்டு ஒழுங்கமைப்பைப் பேண இந்தியா முயல்கிறது.
பூகோள அரசியல் வரைபடத்தில் இந்தியப் பெருங்கடலின் மையப்புள்ளியாக விளங்கும் இலங்கை, உலக வல்லரசுகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சதுரங்கக் களமாக மாறியுள்ளது.
அண்மைய நாட்களாக இலங்கையின் முப்படைகளுக்கும் பொலிஸ் துறைக்கும் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து வான்கலன்கள், கடற்கலன்கள் மற்றும் தரை வாகனங்கள் கொடைகளாக வாரி வழங்கப்பட்டு வருகின்றன.
'சோழியன் குடுமி சும்மா ஆடுமா?' என்ற பழமொழிக்கு ஏற்ப, எந்தவொரு கைம்மாறும் எதிர்பாராமல் இந்த நாடுகள் இலங்கைக்கு இவ்வளவு பெரிய கொடைகளை அள்ளி வழங்குகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.
உண்மையில், இலங்கையின் தற்காப்புப் பலத்தை அதிகரிப்பதை விட, சர்வதேச நாடுகள் தத்தமது பிராந்தியப் பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்துவதையே இந்தத் தாராளமயக் கொடைகளின் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளன.
அண்மைக்கால கொடைகளின் வரவை உற்றுநோக்கினால், அமெரிக்கா, அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையை நோக்கிப் பலமாக நகர்வதைக் காண முடிகிறது. இலங்கை வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான வான்கலன்கள் நாட்டை வந்தடைந்தது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்கக் கடற்படையால் இலங்கைக்கு வழங்கப்பட்ட பத்து ரி.எச்-57 'சீ ரேஞ்சர்' பலநோக்கு ஹெலிகொப்டர்கள் தற்போது இரத்மலானை விமானப்படைத் தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
போர் நடந்த காலத்தில்கூட இலங்கை விமானப்படைக்கு இவ்வளவு பெரிய அளவில் ஒரே தடவையில் ஹெலிகொப்டர்கள் கிடைத்ததில்லை. விமானிகளின் பயிற்சி மற்றும் தேடுதல், மீட்புப் பணிகளுக்காக இவை வழங்கப்பட்டாலும், இலங்கை விமானப்படை தனது வான்பலத்தை இழந்து கொண்டிருந்த சூழலில் அமெரிக்காவின் இந்த உதவி அதன் தேவையை நிவர்த்தி செய்துள்ளது.
இதற்கு இணையாக, அமெரிக்கக் கடலோரக் காவல்படையால் வழங்கப்பட்ட 'டெசிசிவ்' என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் 'என்எல்என்எஸ் சமுத்ரவிஜய' (பி-628) எனும் பெயரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அதிகாரபூர்வமாக கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து 78 நாட்கள் பயணித்து 14,775 கடல் மைல்களைக் கடந்து வந்த இந்தக் கப்பல், இலங்கை கடற்படை மேற்கொண்ட மிக நீண்ட கடல் பயணத்தின் அடையாளமாக மாறியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா வழங்கிய சமுத்ர, கஜபாகு, விஜயபாகு கப்பல்களின் வரிசையில் இந்த நான்காவது கப்பலும் இணைந்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து கிடைத்த கப்பலும் ஹெலிகொப்டர்களும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, பின்னர் மறுசீரமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், அவுஸ்ரேலியா தனது கடலோரக் காவல்படை மூலம் இலங்கைக்கு 12 புத்தம் புதிய கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கியுள்ளது. அதேவேளை, இந்தியாவின் பங்களிப்பாக இலங்கையின் உள்நாட்டுப் பாதுகாப்பைக் குறிவைத்து, குறிப்பாக வடக்கு மாகாண பொலிஸ் நிலையங்களின் பயன்பாட்டிற்காக 300 மில்லியன் ரூபா பெறுமதியான 134 'கப்' வாகனங்கள் இந்தியத் தூதுவரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் போர்க்கப்பல்களையும் ட்ரோன்களையும் வழங்க முன்வந்துள்ள நிலையில், உலக நாடுகளின் கைகள் இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்பைத் தாங்கிப் பிடிப்பதில் தீவிரம் காட்டுகின்றன.
ஆனால், இந்த இராணுவக் கொடைகளின் பின்னணியில் உள்ள புவிசார் அரசியல் சூழ்ச்சியையும் சுயநலன்களையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. அமெரிக்காவின் பிரதான இலக்கு, இலங்கைக்குத் தெற்கே வெறும் 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள சர்வதேசக் கப்பல் பாதையைக் கண்காணிப்பதாகும்.
இந்தியப் பெருங்கடலின் சர்வதேசக் கடல் வர்த்தகப் பாதையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அல்லது கண்காணிக்க இலங்கை கடற்படையைப் பகடைக்காயாகப் பயன்படுத்த அமெரிக்கா முற்படுகிறது. இத்தகைய கொடைகளின் மூலம் இலங்கையைத் எப்போதும் தனது கைக்குள் வைத்திருப்பது அமெரிக்காவின் நீண்டகாலப் உத்தியாகும்.
அவுஸ்ரேலியாவின் உத்தி முற்றிலும் மாறுபட்டது. அது தனது நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் அகதிகள் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டது. இறுதிப் போருக்குப் பின்னர் இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற சட்டவிரோத அகதிகள் படகுகள் அந்நாட்டிற்குப் பெரும் அரசியல் மற்றும் சமூக நெருக்கடியை ஏற்படுத்தின.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைத் தற்காலிகமாகப் புறந்தள்ளிவிட்டு, அவுஸ்ரேலியா இலங்கையுடன் பாதுகாப்புப் பங்காளியாக இணைந்தது. இரு நாடுகளுக்கும் இடையே பரந்து விரிந்துள்ள சுமார் 5,500 கிலோமீட்டர் கடற்பரப்பைத் தனது சொந்தப் போர்க்கப்பல்களைக் கொண்டு கண்காணிப்பது அவுஸ்ரேலியாவிற்குப் பெரும் நிதி மற்றும் மனிதவளச் செலவைப்படுத்தும்.
அதற்குப் பதிலாக, இலங்கை கடலோரக் காவல்படைக்கு நவீன தொழில்நுட்பக் கருவிகளான ட்ரோன்களை வழங்குவதன் மூலம், குறைந்த செலவில் மனிதவள விரயமும், எரிபொருள் விரயமும் இன்றித் தனது எல்லைப் பாதுகாப்பு வேலியை அவுஸ்ரேலியா பலப்படுத்திக் கொள்கிறது.
இந்தியாவின் அக்கறை இலங்கையின் தரைவழி ஸ்திரத்தன்மையுடன் தொடர்புடையது. இலங்கையின் உள்நாட்டுப் பாதுகாப்பில் ஏற்படும் எந்தவொரு அதிர்வும் அல்லது மாற்றமும் அண்டை நாடான இந்தியாவின் பாதுகாப்பிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.
இதனால், இலங்கை இராணுவத்திற்குப் போராயுதங்களை வழங்கித் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதைத் தவிர்த்து, பொலிஸ் துறைக்கு வாகனங்களை வழங்குவதன் மூலம் இலங்கையின் உள்நாட்டு ஒழுங்கமைப்பைப் பேண இந்தியா முயல்கிறது.
அந்த வகையில், இந்த நாடுகள் அனைத்தும் இலங்கையின் மீதான தாராள மனப்பான்மையால் இவற்றை வழங்கவில்லை. இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் மூலமே தத்தமது நாட்டின் தேசியப் பாதுகாப்பையும், பொருளாதார மற்றும் பிராந்திய நலன்களையும் பாதுகாக்க முடியும் என்ற சுயநலக் கணக்கே இதன் பின்னால் உள்ளது.
இலங்கை தீவு தீர்க்கமான ஒரு பாதுகாப்பு அரணாகச் செயற்பட வேண்டும் என்பதே இவர்களின் பொதுவான எதிர்பார்ப்பு. சர்வதேச வல்லரசுகளின் இந்தத் தேவையை இலங்கை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு, அவர்களின் பூகோள அரசியல் மோதல்களுக்குள் சிக்கிவிடாமல், இந்த இராணுவ உதவிகளையும் கொடைகளையும் தனது நாட்டின் சொந்தப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பலத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சாணக்கியமான வெளியுறவுக் கொள்கையைக் கையாள வேண்டும்.
ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களிடத்தில் அத்தகைய வெளிவிவகார விடயங்களை கையாளும் ஆளுமை காணப்படுகின்றதா என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
காரணம், நாட்டை பொருளாதாரத்தில் மீட்டெடுப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு அனைத்து நாடுகளிடத்திலும் 'சரணாகதி' என்ற நிலைமையில் கைநீட்டுவதையே பிரதான பணியாக கொண்டிருக்கின்றது அரசாங்கம்.
இந்த நிலைமையானது, அரசாங்கத்தினை ஒவ்வொரு நாடுகளும் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப கையாள்வதற்கான சூழலையே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
ஆனால் அதுகுறித்து தீர்க்கமான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. வெறுமனே அணிசேரக் கொள்கையையே பின்பற்றுவதாக அறிவித்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் நடைமுறையில் அதற்கு எதிர்த்திசையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இது இராஜதந்திரத்தின் மிகப்பெரிய பலவீனமாகும்.





