இனவழிப்புக்கான நீதியை கோருவதற்கு கத்தோலிக்க சபை தயாராக இல்லை - சிறிதரன் எம்.பி.
பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் , பாராளுமன்றத்தில் பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பில் உரையாற்றினார் என்று பாராளுமன்றத்திற்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதலுக்காக நீதி கோரி இன்று வரை குரல் கொடுக்கும் பேராயர் கர்தினாலும், கத்தோலிக்க சபையினரும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர் என்று கூறுவதற்கு தயக்கம் காட்டுவது ஏன்? இனவழிப்புக்கான நீதியை கோருவதற்கு கத்தோலிக்க சபை தயாராக இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் 11-06-2026 அன்று நடைபெற்ற அமர்வின்போது ''வலுசக்தி மற்றும் வாழ்க்கைச் செலவுப் பாதுகாப்புத் திட்டம்'' தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 2026 மே 27ஆம் திகதி பருத்தித்துறைமுனை பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை கண்டுபிடிப்பதற்காக முறையான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் முன்னெடுக்கவில்லை என்று மீனவர் சமூகத்தினர் எங்களிடம் முறையிட்டுள்ளனர். இவர்களில் தந்தையும் மகனும் அடங்குகின்றனர். இவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்று அரசிடம் இருந்து சரியான பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதனால் அந்த மக்களுக்கு நம்பிக்கைத் தரக்கூடிய வகையில் என்ன நடந்தது என்பதனை கண்டறிய வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் நல்ல செய்தி என்ன என்று கூற வேண்டும்.
அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் இந்த நாட்டில் நடந்த இனவழிப்பு தொடர்பில் கடந்த மே 18ஆம் திகதி கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நாட்டில் இனவழிப்பு நடந்தது. தொடர்ந்தும் அது நடக்கின்றது. இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவு செய்திருந்தார். அவர் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கூறிய கருத்துக்களுக்கு கிறிஸ்தவ அமைப்புகளும் கண்டனத்தை தெரிவித்திருந்தன.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்காக இன்று வரையில் குரல் கொடுக்கும் கர்தினாலும், அவரின் சபையை சார்ந்தவர்களும் இந்த நாட்டில் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர் என்று கூறுவதற்கு தயக்கம் காட்டுவது ஏனென தெரியவில்லை. மன்னார் மாவட்ட ஆயராக இருந்த இராஜப்பு ஜோசப் வெளிப்படையாக இனவழிப்பு என்று கூறியிருந்தார். ஆனால், அதற்கான நீதியை கோருவதற்கு கத்தோலிக்க சபை தயாராக இல்லை. அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் முன்வைத்த கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
யாழ். மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டில் மயிலிட்டியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்தனர். ஆனால் இன்னும் அவர்கள் அந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் இருக்கின்றனர். 35 வருடங்கள் ஆகின்றன. வலுக்கட்டாயமாக இராணுவத்தினரால் அவர்கள் துரத்தப்பட்டனர். அவர்கள் இப்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மயிலிட்டியில் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களின் சொந்த இடத்தில் இராணுவம் தோட்டம் செய்கின்றது. அங்கு இராணுவம் குடியிருக்கவும் இல்லை. இராணுவம் யாழ்ப்பாணத்தில் சலூன் நடத்துகின்றது. தோட்டம் செய்கின்றது. மரக்கறிகளை சந்தையில் விற்கின்றது. முன்பள்ளிகளை நடத்துகின்றது. ஆனால் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் , பாராளுமன்றத்தில் பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பில் உரையாற்றினார் என்று பாராளுமன்றத்திற்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நாட்டில் மக்கள் சொந்த இடத்திற்கு இன்னும் போக முடியாமல் இருக்கின்றனர். 35 வருடங்களுக்கும் மேலாக சொந்த இடத்திற்கு செல்லாமல் உறவினர் வீடுகளில் இருக்கின்றனர். அவர்களின் காணிகளை விடுவியுங்கள். அந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். அந்த மக்களுக்கு மாறி மாறி பொய்களை கூறாமல் அவர்களுக்கு தங்களின் சொந்த இடங்களில் குடியேற அனுமதியுங்கள் என்று கோருகின்றோம் என்றார்.





