பூர்வீக சொத்துக்களை விற்று தான் லால் காந்த புதிய வீட்டை கட்டியுள்ளார் - அமைச்சர் விஜித ஹேரத்
நாட்டில் உள்ள சாதாரண மக்களைப் போலவே எமது கட்சியில் சிலருக்கும் பூர்வீக சொத்துக்கள் உள்ளன.
அமைச்சர் கே.டி. லால் காந்தவின் புதிய வீடானது அவரது பூர்வீகச் சொத்துக்களை விற்பனை செய்ததன் மூலமே கட்டப்பட்டது. முறைகேடான வழியில் எவரும் சொத்துச் சேர்க்கவில்லை. இது குறித்து சந்தேகம் இருப்பின் எவரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று பதில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அமைச்சர் லால் காந்தவின் குடும்பத்திற்குச் சொந்தமான அனுராதபுரத்திலுள்ள பூர்வீகச் சொத்துக்களை விற்றதன் மூலமும், கண்டியில் உள்ள அவரது மனைவியின் சொத்துக்களை விற்றதன் மூலமுமே அவரது வீடு கட்டப்பட்டுள்ளது. அதிகாரத்தையோ அல்லது அமைச்சருக்குரிய சிறப்புரிமைகளையோ பயன்படுத்தி முறைகேடான வழியில் இந்த வீடு கட்டப்படவில்லை.
இது தொடர்பாக எவருக்கேனும் சந்தேகம் அல்லது பிரச்சினை இருந்தால், அவர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கலாம். நாட்டில் உள்ள சாதாரண மக்களைப் போலவே எமது கட்சியில் சிலருக்கும் பூர்வீக சொத்துக்கள் உள்ளன.
அவை அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்துத் தேடியவை. இவை மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துச் சேர்த்த சொத்துக்கள் அல்ல. எமது அமைச்சர்கள் எவரும் முறைகேடான வகையில் சொத்துச் சேர்க்கவில்லை என்று நான் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன் என்றார்.





