இந்தியாவின் பாதுகாப்பிற்கான உறுதிமொழியை நிலைநிறுத்தி வருகிறது: டில்லியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய
இந்தியா - இலங்கை கூட்டுறவு தற்காலிகமானதல்ல ஆனால் கட்டமைப்பு ரீதியானது. இது இன்றைய தற்காலிக வசதியல்ல, மாறாக நாளைய அத்தியாவசியம்' என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் இலங்கை மண்ணை ஒருபோதும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற தனது உறுதியான உறுதிமொழியை இலங்கை தொடர்ந்தும் நிலைநிறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தியாவானது இலங்கையின் பயணத்தில் உறுதியான பங்காளியாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது உத்தியோகபூர்வ டில்லி விஜயத்தின் ஒரு அங்கமாக சுமார் 3 தசாப்தங்களுக்கு முன்னர் கல்வி கற்ற டில்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரிக்கும் லிஜயம் செய்தார். அக்கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தான் அங்கு கற்ற போது பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்வது மற்றும் கடினமான கேள்விகளைக் கேட்பதன் முக்கியத்துவம் ஆகியவை இந்தியா குறித்த தனது மனதில் நீடித்த நினைவுகளாக இருப்பதாக தெரிவித்தார்.
முதல்முறையாக தான் டில்லிக்குள் நுழைந்தபோது கனவுகள், நிச்சயமற்ற தன்மைகள், நம்பிக்கைகள், கேள்விகள் மற்றும் சிறிய நடுக்கம் ஆகியவற்றின் கலவையுடன் இருந்ததாக நினைவுகூர்ந்த அவர், டில்லி தன்னை ஏற்றுக்கொண்டு, சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அளித்ததாகக் கூறினார். இந்த பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்வதுதான் டில்லியை தனித்துவமாக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தனது ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், 'அவர்கள் எனக்கு வெறும் கோட்பாடுகளை மட்டும் கற்பிக்கவில்லை, மாறாக விமர்சன ரீதியாக சிந்திக்கவும், கேள்வி கேட்கவும், அநீதியை ஒருபோதும் தவிர்க்க முடியாததாக ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க என்னை ஊக்குவித்தனர்' என்று கூறினார். சமத்துவமின்மை, பெண்ணியம் மற்றும் மனித மேம்பாடு குறித்த கல்லூரி உரையாடல்கள் அவசரமானதாகவும் அவசியமானதாகவும் உணர்ந்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.
'எனது கல்விப் பயணத்தை இப்போது நினைத்துப் பார்க்கையில், நான் சமூகவியல் கற்பித்தாலும், அல்லது அதிருப்தி, சமூக நீதி, பாகுபாடு அல்லது மனித உரிமைகள் குறித்து ஆராய்ச்சி செய்தாலும், இந்துக் கல்லூரியில் எனக்கு புகட்டப்பட்ட கல்வி சார்ந்த புரிதல்கள் என்னை விட்டு ஒருபோதும் விலகவில்லை என்று நினைக்கிறேன்,' என்றும் அவர் கூறினார். 'இந்துக் கல்லூரியில் என் மனதில் உருவான ஒரு உண்மையை இந்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் வலுப்படுத்தின. அவை என்னவென்றால், செயலற்ற அறிவு முழுமையற்றது, மேலும் கல்வி நம்மைப் பின்தங்கியவர்களுக்கு சேவை செய்ய கடமைப்படுத்துகிறது என்பதே ஆகும்.
அத்துடன், கடினமான கேள்விகளைக் கேட்கும் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் மாணவர்களை அவர் வலியுறுத்தினார். அதேவேளை அவர் தனது உரையில் இந்தியா - இலங்கைக்கிடையிலான பிணைப்பு தொடர்பிலும் முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டினார். இந்தியா - இலங்கை கூட்டுறவு தற்காலிகமானதல்ல ஆனால் கட்டமைப்பு ரீதியானது. இது இன்றைய தற்காலிக வசதியல்ல, மாறாக நாளைய அத்தியாவசியம்' என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியாவானது இலங்கையின் பயணத்தில் உறுதியான பங்காளியாக இருந்து வருவதாகவும், அதன் பொருளாதார மீட்சியை ஆதரிப்பதாகவும், நெருக்கடியான காலங்களில் முக்கியமான உதவிகளை வழங்குவதாகவும், ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை அடைவதற்கான முயற்சியில் இலங்கையுடன் நிற்பதாகவும் அவர் கூறினார். அதேவேளை 'இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் இலங்கை மண்ணை ஒருபோதும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற தனது உறுதியான உறுதிமொழியை இலங்கையும் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது' என்றும் அவர் தெரிவித்தார்.