மஹிந்த வின் குண்டுதுளைக்காத வாகனமும் மீளப்பெறப்பட்டது: சட்டத்தரணி மனோஜ் கமகே
வசீம் தாஜூதீன் மாத்திரமின்றி கடந்த காலங்களில் கொல்லப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் குண்டு துளைக்காத வாகனம் உள்ளிட்ட சகல வாகனங்களும் உரிய தரப்பினரிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் இந்த செயற்பாடுகளால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
கொழும்பில் 04-10-2025 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் சகல வாகனங்களையும் மீள ஒப்படைக்குமாறு கடந்த செப்டெம்பர் 24ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய துப்பாக்கி ரவைகள் துளைக்காத பாதுகாப்பு வாகனம், பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனம் உள்ளிட்டவற்றை கையளித்திருக்கின்றோம்.
இவ்வாறான நிலையில் பாரிய உயிர் அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய அபாயம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டுள்ளது. 30 ஆண்டு கால யுத்தத்தை நிறைவு செய்ததால் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே அவருக்கு துப்பாக்கி ரவைகள் துளைக்காத பாதுகாப்பு வாகனம் வழங்கப்பட்டது. அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் இந்த வாகனத்தினாலேயே தற்கொலை குண்டு தாக்குதலொன்றிலிருந்து உயிர் தப்பினார்.
பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அந்த வாகனத்தை மீள பெறுவதற்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ளோம். உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் இந்த கோரிக்கையை முன்வைப்போம். விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிப்பட்ட பொருட்களுக்கு அப்பால் அரசாங்கத்துக்கு உரித்தானவையும் காணப்படுகின்றன.
எனவே அவை முறையாக அரசாங்கத்தால் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறன்றி எமது பொருட்களை அங்கிருந்து அகற்ற முடியாது. இதனை காரணமாகவே அந்த இல்லத்தை வழங்குவது தாமதமடைகிறது. இந்த இல்லம் தற்போது எம்மால் உபயோகப்படுத்தப்படவில்லை. யுத்தத்தை நிறைவு செய்த முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு இந்தளவுக்கு பலவீனப்படுத்தப்பட்டுள்ளமைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வசீம் தாஜூதீன் மாத்திரமின்றி கடந்த காலங்களில் கொல்லப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். ஆனால் அவற்றை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்த முற்படக் கூடாது. கடந்த வாரம் கஜ்ஜா என்ற நபரை உபயோகித்து இந்த விடயத்தில் பாரியதொரு திரைப்படத்தை வெளியிட அரசாங்கம் முயற்சித்தது.
ஆனால் குறித்த நபரின் மகனால் வெளியிடப்பட்ட தகவல்களால் அந்த முயற்சி தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளது. விசாரணைகளை முன்னெடுக்க வேண்டாம் என நாம் கூறவில்லை. ஆனால் தமது அரசியல் சகாக்கள் ஊடாக தமது தேவைக்கேற்ப அந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.





