ஒரு கோடி பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஆறு சீன பிரஜைகள் கட்டுநாயக்கவில் கைது
சுங்க அதிகாரிகளின் தகவல்படி, குறித்த சந்தேகநபர்கள் மூன்று வெவ்வேறு விமானங்களின் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடியே 13 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளைச் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற ஆறு வெளிநாட்டுப் பிரஜைகள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் வருகை முனையத்தில் 17-04-2026 அன்று சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான ஆறு பயணிகளைத் தடுத்து வைத்துச் சோதனை செய்ததில் இவர்களிடமிருந்து பெருமளவான வெளிநாட்டுச் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுங்க அதிகாரிகளின் தகவல்படி, குறித்த சந்தேகநபர்கள் மூன்று வெவ்வேறு விமானங்களின் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்களது பயணப் பொதிகள் மற்றும் பைகளைச் சோதனையிட்ட போது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 75,900 சிகரெட்டுகள் மீட்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 11.38 மில்லியன் ரூபா (1 கோடியே 13 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆறு சீனப் பிரஜைகளும் சுங்கப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





