பாதிக்கப்படாத பாடசாலைகள் 16ஆம் திகதி மீள ஆரம்பம்
விடுமுறையின் பின்னர் மீண்டும் 2025.12.29ஆம் திகதி முதல் 2025.12.31ஆம் திகதி வரை பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும். முஸ்லிம் பாடசாலைகள் 2026.01.02ஆம் திகதி வரை நடைபெறும்.
பெயர் குறிப்பிடப்பட்ட பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்கிழமை ஆரம்பமாகும். எனினும் மூன்றாம் தவணைப் பரீட்சை நடைபெறாது. 11ஆம் தர மாணவர்களுக்கு மாத்திரம் முன் பரீட்சைப் பயிற்சி நடத்தப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவௌ தெரிவித்தார்.
மேலும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இதுவரை நடத்தப்படாத ஏனைய பாடங்களுக்கான பரீட்சைகள் அடுத்த வருடம் ஜனவரி 12ஆம் திகதியிலிருந்து நடத்தப்படும் என்றும், ஆசிரியர், அதிபர் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் 15ஆம் திகதி பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் அவர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள கல்வி அமைச்சில் 09-12-2025 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் அனைத்து மாகாணங்களுடனும் ஒருங்கிணைந்து நிலைமையை மீளாய்வு செய்ததற்கு அமைய, நாடளாவிய ரீதியில் உள்ள 10,076 பாடசாலைகளில் 9,929 பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி திறக்கப்படும்.
அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட 147 பாடசாலைகள் தற்போது ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளன. மாகாண ரீதியாக வழங்கப்படும் மேலதிக உறுதிப்படுத்தல்களின்போது ஏற்படக்கூடிய எண்ணிக்கை ரீதியான மாற்றங்கள் குறித்துத் தொடர்ச்சியாக உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும்.
அத்துடன், டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பமாகும் அனைத்துப் பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் டிசம்பர் 15ஆம் திகதி சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும்.
அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் சீருடை தொடர்பில் நெகிழ்வுத்தன்மை பின்பற்றப்படும்.
மேலும், 2025ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025.12.16ஆம் திகதி முதல் 2025.12.22ஆம் திகதி வரை இடம்பெறும். பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 23ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.
விடுமுறையின் பின்னர் மீண்டும் 2025.12.29ஆம் திகதி முதல் 2025.12.31ஆம் திகதி வரை பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும். முஸ்லிம் பாடசாலைகள் 2026.01.02ஆம் திகதி வரை நடைபெறும்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் நடத்தப்படாத ஏனைய பாடங்கள் 2026 ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அது தொடர்பான மேலதிக அறிவிப்புகளைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உத்தியோகபூர்வமாக வெளியிடுவார்.
2026ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை 2026 ஜனவரி 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி பெப்ரவரி மாதம் நடைபெறும். அதற்கமைய பரீட்சைகளை நடத்துவதற்காக 2026 பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்றார்.





