ரூ.5,000 கோடி சொத்து உள்ள பாஜக எம்எல்ஏ யாசகராக மாறினார்
யாசகராக வாழ்ந்த நாளில் சில விஷயங்கள் தெளிவாகப் புரிந்தது. பணம், பதவிக்கு மட்டுமே மக்கள் மதிப்பு அளிக்கின்றனர்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்தவர் பராக் ஷா (57). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக உள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.5,000 கோடியாக மதிப்பிடப்படுகிறது. சமண துறவி நம்ரமுனி மகாராஜின் தீவிர சீடரான பராக் ஷா, அவரது அறிவுரைப்படி, சில நாட்களுக்கு முன்பு யாசகராக மாறி மும்பை தெருக்களில் தர்மம் கோரி அலைந்தார்.
கையில் ஒரு பழைய சாக்கு பை, ஒரு துடைப்பத்தை தூக்கிக் கொண்டு தெரு, தெருவாக சுற்றினார். காட்கோபர் ரயில் நிலையவாயிலில் அமர்ந்து யாசகம் கேட்டார்.
இந்த வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து எம்எல்ஏ பராக் ஷா கூறும்போது, “குருவின் அறிவுரைப்படி ஒருநாள் யாசகராக மாறினேன். காட்கோபர் பகுதியில் சுற்றித் திரிந்து தர்மம் கேட்டேன்.
எனது சொந்த வணிக வளாகத்துக்கு சென்றேன். ஆனால் எனது காவலாளியே என்னை வெளியே தள்ளிவிட்டார். எனது நெருங்கிய நண்பரை தேடிச் சென்றேன். அவரே என்னை வெளியே விரட்டியடித்தார்.
யாசகராக வாழ்ந்த நாளில் சில விஷயங்கள் தெளிவாகப் புரிந்தது. பணம், பதவிக்கு மட்டுமே மக்கள் மதிப்பு அளிக்கின்றனர்.
தனிநபர், ஏழைகளுக்கு எந்த மரியாதையும் இல்லை. ஆனால் மும்பையில் மனிதாபிமானம் இன்னமும் நீடித்திருக்கிறது. சில இளைஞர்கள், இளம்பெண்கள் எனக்கு 20 ரூபாயை வழங்கினர். ஒரு சமோசா வியாபாரி எனக்கு இலவசமாக சமோசா வழங்கினார். இந்த அனுபவத்தை எனது வாழ்நாளில் மறக்க முடியாது” என்றார்.





