பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்பில் அவதூறு: நடவடிக்கைக்கு அரசாங்கம் உத்தரவு
14,000 க்கும் மேற்பட்ட முகநூல் கணக்குகளில் பெண்களின் புகைப்படங்கள் பாலியல் தூண்டல் கருத்துக்களுடன் பகிரப்பட்டு வருகின்றன.
பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி பாலியல் ரீதியான மற்றும் அவதூறான கருத்துக்களுடன் போலி கணக்குகள் மூலம் பகிரும் முகநூல் கணக்குகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, இவ்வாறான கணக்குகளை வைத்திருப்பவர்கள் மற்றும் அவற்றில் பங்கேற்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்குப் பணித்துள்ளதுடன், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையையும் தனது சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
14,000 க்கும் மேற்பட்ட முகநூல் கணக்குகளில் பெண்களின் புகைப்படங்கள் பாலியல் தூண்டல் கருத்துக்களுடன் பகிரப்பட்டு வருகின்றன. சிலர் இந்த புகைப்படங்களைப் பணத்திற்காக விற்பனை செய்வதாகவும், புகைப்படங்களில் இருப்பவர்கள் பாலியல் உறவுக்கு அழைப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்கிரமசிங்க, குறித்த வகையான முகநூல் கணக்குகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், மேலதிக சட்ட ஆலோசனைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கணினி அவசர கால பதிலளிப்பு பிரிவு சமூக வலைத்தளங்களான டிக்டொக் மற்றும் ரெலிகிராம் ஆகியவற்றில் இருந்து இவ்வாறான உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டு விட்டதாகவும், முகநூல் கணக்குகளை நீக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனம் இவ்வாறான போலி கணக்குகளின் விவரங்களை பொலிஸாருக்கு வழங்க ஒத்துழைப்பதாக குறிப்பிட்ட கணினி அவசர கால பதிலளிப்பு பிரிவு பொறியாளர் சாருக தமுனுபொல, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அமைச்சின் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவு மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியன இணைந்து இதில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.





