இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் குடும்ப உறுப்பினர் மீதான பொறுப்புணர்வுக்கு ஒத்தது: இந்திய உயர்ஸ்தானிகர் நெகிழ்ச்சி
திட்டத்தின் கீழான புதிய செயற்பாடுகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம்.

இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் பொறுப்புணர்ச்சியுடனான உதவிகள் என அடையாளப்படுத்தப்படுகின்றன. அது ஒரு குடும்ப உறுப்பினர் மீதான பொறுப்புணர்வுக்கு ஒத்ததாகும். இலங்கை முழுவதுக்குமான அபிவிருத்திக்கான உறுதிப்பாட்டில் தாம் முழுமையான அர்ப்பணிப்புடன் இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள் இரு நாடுகளுக்கும் இடையில், வாழும் உறவுப் பாலமாக திகழ்வதாக பெருமிதம் கொண்ட உயர்ஸ்தானிகர், இந்த சமூகத்தை சேர்ந்த ஒவ்வொருவரதும் ஒட்டுமொத்த அபிவிருத்தியை மேம்படுத்துதல், வலுவூட்டுதல் , உறுதிப்படுத்துதல் தமது இலக்காக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பண்டாரவளையில் 2056 பயனாளிகளுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் வீட்டுறுதிக்கான ஆவணத்தை வழங்கும் நிகழ்வு 12-10-2025 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமானதும் அசைக்க முடியாததும் விசேடமானதுமான உறவுக்கான சான்றாக ஜனாதிபதி அனுரகுமாரதிஸாநாயக்க இந்த நிகழ்வில் கலந்து கொண்டதையிட்டு பெருமிதம் கொள்கின்றோம்.
இது நமது மக்களின் அபிவிருத்திக்காக பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கின்றது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இந்த பகிரப்பட்ட உறுதிப்பாடானது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது உறுதிப்படுத்தப்பட்டது. அவரது தலைமைத்துவத்தின் கீழ் 'எல்லாருக்கும் எல்லாவற்றையும் கிடைக்கச் செய்வோம்" என்ற நோக்கத்தின் கீழ் 'வளர்ந்த பாரதம்" என்ற இலக்குடன் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
முதல் முறையாக கடந்த தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் இலங்கையும் அழகான வாழ்க்கை என்ற இலக்கை நோக்கிய பாதையில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது . இன்றைய இந்த நிகழ்வானது இந்தியா இலங்கைக்கிடையில் பிரிக்க முடியாத பிணைப்புகள் , வரலாறு, நட்புறவு என்பவற்றின் கொண்டாட்டமாகவே அமைகின்றது.
நாம் சகோதரர்கள், நாம் வரலாற்று நாகரிகத்தின் இரட்டையர்கள். கடந்த காலங்களை விட மிகவும் பிரகாசமானதும் அனைவரும் சமாதானம் , கௌரவம் மற்றும் சிறந்த வாய்ப்புகளுடன் வாழக்கூடியதுமான சூழலுக்கான எதிர்காலத்தை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் .
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள் இரு நாடுகளுக்கும் இடையில், வாழும் உறவுப் பாலமாக திகழ்கின்றனர். இந்த சமூகத்துடன் இந்தியாவின் உறவானது பகிரப்பட்ட கலாச்சாரம், மொழி, இரு நாடுகளினதும் மக்களிடையேயான உறவுகள் என்பவற்றுடன் ஆழமாக வேரூன்றிய ஒன்றாகும். காலம் காலமாக இந்த உறவானது மேலும் வலுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கின்றது.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி சமூகத்தினர் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பதன் மூலமும் அதன் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதன் மூலமும் அதேபோல அதன் சமூக கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும் இலங்கை பயணத்தின் ஒருங்கிணைந்த பயணமாக இருந்து வருகின்றனர் .
அவர்களின் கதை மீள் தன்மை மற்றும் உறுதிப்பாட்டை கொண்ட கதை ஆகும் . இந்த சமூகத்தை சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினர்களதும் ஒட்டுமொத்த அபிவிருத்தியை மேம்படுத்துதல், வலுவூட்டுதல் , உறுதிப்படுத்துதல் ஆகியவையே எப்போதும் எங்களது இலக்காக காணப்படுகிறது. இந்த பயணத்தில் இலங்கை அரசாங்கத்தின் நிலையான பங்காளராக இந்தியா இருந்து வருகிறது.
இந்த நிலையில் வீடமைப்பு, கல்வி, திறன் மேம்பாடு , சுகாதார பராமரிப்பு , சமூக அபிவிருத்தி போன்றவற்றில் நாங்கள் கைகோர்த்தவாறு பணியாற்றி வருகின்றோம். இன்று இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இலங்கை வாழ் தமிழர்களுக்காக முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டத்திற்கான நிகழ்வில் நாம் ஒன்று கூடியுள்ளோம் .
இந்த மக்களுக்காக ஒட்டுமொத்தமாக 14 000 வீடுகள் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டன. மூன்றாவது கட்டத்துக்கான 4000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் , இன்னும் ஒரு சில வீடுகள் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளன.
2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் மேலும் 10 000 வீடுகளை அறிவித்தார். அதற்கு அமைய 1100 வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இன்று நாம் இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்து வைக்கின்றோம் .
இதற்காக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இலங்கையில் நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி 65 000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. இன்றைய சூழலில் 64 பில்லியன் இந்திய ரூபாய் நன்கொடையின் கீழ் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தத் திட்டமானது பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வியலை மாற்றியுள்ளது.
இதன் மூலம் அவர்களுக்கு இருப்பிட வசதிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அது மாத்திரம்மின்றி அவர்களது கௌரவமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் வாழ்க்கை தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
வீடுகளை நிர்மாணிப்பது மாத்திரம் எமது இலக்கல்ல. எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் . கல்வி மற்றும் சுகாதார பராமரிப்பு வரையிலும் திறன் மேம்பாடு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வரையிலுமான பல்வேறு துறைகளை உள்ளடக்கி எமது முயற்சிகளை நாம் அமல்படுத்தி வருகின்றோம்.
இது பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டிக்கோயாவில் பல்வேறு சிகிச்சை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை ஒன்றை நிர்மாணித்ததுடன், மாத்தளையில் மகாத்மா காந்தி சர்வதேச நிலையத்தை நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அது மாத்திரமின்றி பல்வேறு கல்வி நிலையங்களின் உட்கட்டமைப்புகளையும் நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம் . பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு பாடசாலைகளுக்கு நவீன வகுப்பறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்களையும் வழங்கி வருகின்றோம். பெருந்தோட்ட பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக புதிய திட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றோம். இந்திய வம்சாவளி இலங்கை வாழ் தமிழர்களுக்காக இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் சில உதாரணங்களே இவை ஆகும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற மலையகம் 200 நிகழ்வில் இந்த மக்களின் அபிவிருத்திக்காக 2.5 பில்லியன் பெறுமதியிலான அபிவிருத்தி திட்டங்களும் அறிவிக்கப்பட்டன . அதன் கீழம் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சி திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது . இத்திட்டத்தினால் 2000 க்கும் அதிகமான பெருந்தோட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் நன்மை அடைந்துள்ளனர் .
திட்டத்தின் கீழான புதிய செயற்பாடுகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம். அதற்கமைய அந்த நன்மைகள் விரைவில் மக்களை சென்றடைய வழிவகுக்கும். இவ்வாண்டு பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்த போது நுவரெலியாவிலுள்ள சீதையம்மன் ஆலயத்தின் அபிவிருத்திக்கான உதவிகளை அறிவித்திருந்தார். இதன் மூலம் சுற்றுலாத்துறையோடு பெருந்தோட்ட சமூகத்தில் தொழில் முறைமைகளும் மேன்மையடையும். அதன் மூலம் இப்பிராந்தியத்தின் பொருளாதார, சமூக அபிவிருத்திகள் மேம்படவும் வாய்ப்புகள் கிடைக்கும் .
இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் பொறுப்புணர்ச்சியுடனான உதவிகள் என அடையாளப்படுத்தப்படுகின்றன. அது ஒரு குடும்ப உறுப்பினர் மீதான பொறுப்புணர்வுக்கு ஒத்ததாகும். இலங்கை முழுவதுக்குமான அபிவிருத்திக்கான உறுதிப்பாட்டில் நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளோம்.
இந்த ஒட்டுமொத்த உதவிகளின் ஒரு பகுதியாகவே இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கான எமது ஆதரவு அமைகின்றது. இலங்கை மக்களின் நலன்கள் , முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்துக்கான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டினை இச்சந்தர்ப்பத்தில் நான் மீண்டும் உறுதிப்படுத்துகின்றேன்.
தீபாவளி தீபங்களை போன்று இந்திய வீட்டு திட்டமும் எண்ணற்ற மலையக மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றட்டும் . இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்தின் கூட்டு முயற்சிகள் அந்த மக்களின் வாழ்க்கைக்கு சுபிட்சத்தை தரட்டும் என வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார்.