ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாட்டு வரவேற்பு: செல்வம் எம்.பி
மன்னார் வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ள இந்தியாவுக்கு நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்.
மனித உரிமைகள் மீறல்கள் விடயத்தில் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது. மனித உரிமை மீறல் தொடர்பில் இந்தியா தனது கருத்தை ஆழமாக பதிவு செய்துள்ளது. இதை பாராட்டுகின்றோம். மாகாண சபை முறைமை அரசியல் ரீதியிலான அதிகார பரவலாக்கலை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதனை வரவேற்கின்றோம் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 11-09-2025அன்று நடைபெற்ற தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மன்னார் வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ள இந்தியாவுக்கு நன்றிகளை கூறிக்கொள்கின்றேன். இதேவேளை தொடர்ந்தும் 40 நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.. காற்றாலை மின் உற்பத்தியை மன்னார் நகருக்குள் கொண்டு வர வேண்டாம் என்ற போராட்டத்தை வெறும் கோசமாக நீங்கள் கருதிவிடக் கூடாது. அது உணர்வு ரீதியான மன்னார் மாவட்ட மண்ணையும் உயிர்களையும் காப்பாற்றுவதற்கான போராட்டமே ஆகும்.
அந்த போராட்டத்தில் அங்குள்ள இளைஞர்கள் தமது மக்களுக்காக தியாகங்களை செய்யவும் தயாராக இருக்கின்றனர். அரசாங்கம் இந்த விடயத்தில் சரியான முறைமையை கையாள வேண்டும். அங்குள்ள மக்களின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக அந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
ஐ. நா தீர்மானம் மிக இறுக்கமாகியுள்ளது. எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயத்தை கோரும் வகையில் ஐ. நா தீர்மானம் மிகவும் வலுவாக இருக்கும் நிலைமையில், வெளிவிவகார அமைச்சர் உள்ளக பொறிமுறையில் மனித உரிமை மீறல் தொடர்பான விடயங்களை கையாளப் போவதாக கூறுகின்றார். அது எப்படி சுடச் சொன்னவரை காப்பாற்றிவிட்டு சுட்டவரை விசாரிப்பதா? களவெடுக்க சொன்னவனை விட்டுவிட்டு களவெடுத்தவனை விசாரிப்பதா? எங்களை பொறுத்தவரையில் உள்ளக விசாரணைகளை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். சர்வதேச கண்காணிப்புடன் விசாரணைகள் நடக்க வேண்டும். அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ளும் என்று நம்புகின்றோம்.
கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் இந்த அரசாங்கத்தின் ஒரு அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மக்களை கொன்று குவித்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பதே பிரதான நோக்கமாகும். இதனால் இந்த விடயத்தில் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது. இதேவேளை மனித உரிமை மீறல் தொடர்பில் இந்தியா தனது கருத்தை ஆழமாக பதிவு செய்துள்ளது. இதனை பாராட்டுகின்றோம். மாகாண சபை முறைமை அரசியல் ரீதியிலான அதிகார பரவலாக்கலை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதனை வரவேற்கின்றோம் என்றார்.





