இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு கூட்டு எதிரணி பொது வேலைத்திட்டம்
ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் இதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்தார்.
நாட்டின் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு, நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பிவிதுரு ஹெல உருமய, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு பிரதான கட்சிகளி இந்த பொது வேலைத்திட்டத்தில் கைகோர்த்துள்ளன.
இது குறித்து தெளிவுபடுத்துவதற்கான விசேட ஊடகவியலாளர் மாநாடு 11-03-2026 அன்று கொழும்பிலுள்ள அமாரி ஹோட்டலில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் இடம்பெற்றது. அதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் சஞ்சீவ எதிரிமான்ன, பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில, ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் சம்பிக ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள, ருவான் விஜேவர்தன, நவீன் திஸாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் மனோ கணேஷன், வேலுசாமி இராதா கிருஸ்னண் மற்றும் முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா உள்ளிட்ட பல சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
கூட்டு எதிர்க்கட்சிகளின் இந்த பொது வேலைத்திட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், 'ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் இறையாண்மையை பாதுகாப்போம் எனும் கருப்பொருளின் கீழ் ஒன்றிணைந்து செயற்படுவதற்காக நீங்கள் அனைவரும் இன்று இங்கு குழுமியுள்ளீர்கள். இப்பணிகளுக்காக ஒன்றிணைந்துள்ள அனைத்து தரப்பினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறித்த கருப்பொருளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து துறைகளும் பலத்த அச்சுறுத்தலுக்கும் சவாலுக்கும் உள்ளாகியுள்ள ஒரு தருணத்தில், இவ்வாறு ஒன்றிணைவது விசேடமாகப் பாராட்டப்பட வேண்டியது. இப்பணிகளில் நான் எப்போதும் பங்களிப்பு வழங்கியுள்ளேன். எதிர்காலத்திலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழிகாட்டத் தயாராக இருக்கின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியும் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கையின் பங்காளியாக இருந்து வருகின்றது.
எமக்கு முன்னால் உள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டுமானால், நாம் கண்டிப்பாக ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்து சவால்களை வெல்வதைத் தவிர வேறு மாற்று வழி இல்லை. அதற்காக நீங்கள் அனைவரும் வழங்கும் பங்களிப்பை மீண்டும் நினைவு கூர்வதுடன், உங்கள் அனைத்துப் பணிகளும் சர்வபிரகாரமும் வெற்றியளிக்கப் பிரார்த்திக்கிறேன்.' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் இதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்தார். 'ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சி என்ற ரீதியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் கூட்டு எதிரணியின் இந்த பொது மேடையில் நாமும் இணைந்து கொண்டிருக்கின்றோம். இதில் பங்கேற்க முன்னர் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடினேன். தற்போது ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்த பேச்சுவார்த்தைகள் ஒரு நிலையை அடைந்த பின்னர் அவரும் எம்முடன் ஒன்றாக அமர்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என அவர் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.' என அவர் குறிப்பிட்டார்.
தமது பொது வேலைத்திட்டம் குறித்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெளிவுபடுத்துகையில், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் இறையாண்மையை பாதுகாப்போம் எனும் கருப்பொருள் இன்று எமது நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்றாகக் காணப்படுகிறது. இம்மூன்று துறைகளும் கடும் இன்று கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. இந்த அச்சுறுத்தல்களை பலத்துடன் எதிர்கொள்வதற்காக கூட்டு எதிர்க்கட்சி பொது வேலைத்திட்டமொன்றில் களமிறங்க வேண்டும்.
வெ வ்வேறு அரசியல் கட்சிகளும், குழுக்களும் எம்முடன் இணைந்துள்ளன. இவ்வனைத்து கட்சிகளினதும் தனித்துவத்தன்மையை முழுமையாக பாதுகாத்துக் கொண்டு, தீவிர அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக முன்வந்துள்ளோம். இந்த பொது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக கூட்டு வேலைத்திட்டத்தின் கடுமையான தேவையை நாம் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்கின்றோம்.
எனவே இதற்காக ஒரு கொள்கை ரீதியான கட்டமைப்பு தயாரிப்பு பணிகளை தற்போது முன்னெடுத்து வருகின்றோம். அந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை அண்மித்துள்ளன. வெகுவிரைவில் அந்த ஆவணத்தை நிறைவு செய்து, சகல கட்சிகளின் தலைவர்களிடமும் அதற்காக அனுமதியையும், கையெழுத்தையும் பெற்று அதனை நாட்டுக்கு வெளிப்படுத்துவோம். அரசியல் கட்சிகள் மாத்திரமின்றி, சிவில் அமைப்புக்களும் எம்முடன் கைகோர்த்துள்ளன எனக் குறிப்பிட்டார்.





