முன்பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தேசபந்து தென்னகோன் கைது
தேசபந்த்துவின் கோரிக்கையை நிராகரித்த உத்தர்வை அறிவித்த நீதிவான், மனுவை பரிசீலிக்கும் போது இந்த சம்பவம் தொடர்பில் தேசபந்த்து பூரணமாக அறிந்திருந்த்துள்ளமை தெளிவாவதாக குறிப்பிட்டார்.
தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி அமைதிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 'மைனா கோ கம','கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், பதவி விலக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல்கள் மற்றறும் அந்த தாக்குதலை தடுக்காமை, மற்றும் கடமையை மீறியமை தொடர்பிலும் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
தன்னை கைது செய்தால் பிணையில் விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த முன் பிணை மனு, கோட்டை நீதிவான் நிலுபுலீ லங்காபுரவினால் 20-08-2025அன்று நிராகரிக்கப்பட்ட நிலையில், மிரிஹானை பகுதியில் உள்ள தேசபந்துவின் வீட்டுக்கு சென்ற சி.ஐ.டி. சிறப்புக் குழு அவரைக் கைது செய்தது.
'மைனா கோ கம', 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் சந்தேகநபராக தேசபந்துவை பெயரிடுமாறு சட்டமா அதிபர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி குற்றப்புலானய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை அளித்திருந்தார்.
குறித்த ஆலோசனை கடிதத்தை வலுவற்றதாக்கி தீர்ப்பு வழங்குமாறு கோரி தேசபந்து தென்னகோனால் அதன் பின்னர் மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரணை செய்த அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான நீதிபதிகள் அமர்வால் குறித்த ஆலோசனை கடிதத்தை வலுவற்றதாக்கி கடந்த 2023 ஜூன் 26 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
அந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் சட்ட மா அதிபர் விசேட மேன் முறையீடொன்றினை தாக்கல் செய்தார்.
சட்டமா அதிபர் தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டை விசாரிக்க அனுமதி அளித்து, ஜனக் டி சில்வா, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு, மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு கடந்த ஜூலை 22 ஆம் திகதி இடைக்கால தடை விதித்தது.
தன்னை இந்த விவகாரத்தில் கைது செய்தால் பிணையில் விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்கக் கோரி தேசபந்த்து தென்னகோன் முன் பிணை மனுவை கோட்டை நீதிவான் நீதிம்னறில் தாக்கல் செய்தார்.
இது தொடர்பில் விசாரணை செய்த கோட்டை நீதிவான் நிலுபுலீ லங்காபுர தேசபந்த்துவின் முன் பிணை கோரிக்கையை நிராகரித்தார்.
இந்த உத்தரவு அறிவிக்கப்பட்ட போது, தனது சேவை பெறுநர் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளாரா என தேசபந்த்துவின் சட்டத்தரணி அஜித் பத்திரண கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரச சட்டவாதி ஒஸ்வால்ட் பெரேரா, தேசபந்து தென்னகோன் ஏற்கனவே சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருப்பதாக கூறினார்.
இதன்போது தேசபந்த்துவின் கோரிக்கையை நிராகரித்த உத்தர்வை அறிவித்த நீதிவான், மனுவை பரிசீலிக்கும் போது இந்த சம்பவம் தொடர்பில் தேசபந்த்து பூரணமாக அறிந்திருந்த்துள்ளமை தெளிவாவதாக குறிப்பிட்டார்.
அந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தான் சந்தேக நபராக சேர்க்கப்படவில்லை என்று பிணை மனுவில் கூறப்பட்டிருந்தாலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்டமா அதிபருக்கு விசாரணை கோவைகளை அனுப்பும் போது, குறித்த சம்பவத்தின் காணொளி காட்சிகளை அனுப்புவதன் மூலமும் பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி விசாரணையாளர்கள் செயல்பட்டதாக நீதிவான் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்த நிலையில், முன் பிணை கோரிக்கை நிரகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசபந்துவை தேடிச் சென்ற சி.ஐ.டி. குழு, அவரை மிரிஹானை வீட்டில் வைத்து கைது செய்தது.





