முல்லையில் இளைஞன் மரணம்:ஆறு இரணுவத்தினர் கைது
இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்துள்ள நிலையில் ஒருவர் மாயமாகிய நிலையில், 09-08-2025 காலை அன்று காலை முத்தையன்கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஆறு இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்த நிலையில் 3 இராணுவத்தினரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த இளைஞனின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, உடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த இராணுவ முகாமிற்கு சென்ற ஐவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு நபருக்கு முதுகு பகுதிகளில் பலத்த அடிகாயங்கள் இருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து 07-08-2025 இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அதனையடுத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ் இராணுவ முகாமிலுள்ள கட்டடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தகரங்கள் தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுதினர் ஒருவரால் தொலைபேசியில் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து குறித்த ஐவரும் சென்றுள்ளனர்.
இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால் இராணுவத்தினர் துரத்தி துரத்தி இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள குளம் வரை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதலால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தம்மை தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்துள்ள நிலையில் ஒருவர் மாயமாகிய நிலையில், 09-08-2025 காலை அன்று காலை முத்தையன்கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இராணுவ முகாமிற்கு சென்ற இராணுவ வாகனம் வீதியில் பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த காணாமல்போன இளைஞனின் சகோதரரால் குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.





