நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பயந்து மறைந்துக் கொள்ளவில்லை - ஞானசார தேரர்
100 இடங்களில் குண்டு வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தார்கள்.
கடுமையான மன உளைச்சல் காரணமாகவே ஆரண்ய சோனாசன்ன ஆராமைக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டிருந்தேன். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பயந்து மறைந்துக் கொள்ளவில்லை. பௌத்தமத தலைவர்களின் அறிவுருத்தலின் பேரிலேயே தான் அங்கு சென்றதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 6 வருட சிறைத்தண்டனை 05-10-2026அன்று முதல் மீண்டும் அமுல்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் விளக்கமறியலுக்கு அழைத்துச் செல்லப்படும்போது, நீதிமன்ற வழாகத்திலிருந்து, ஞானசார தேரர் சிறைச்சாலை பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சந்தரப்பத்தின் போதே ஊடகங்கள் முன்னிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
நாட்டிற்காக உழைக்கும்போது இது ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும். நாட்டில் எல்லோரும் உழைக்கிறார்கள். நான் இந்த நாட்டுக்காகவே உழைத்தேன். நான் செல்வது சிறைக்கு. எனக்கு இந்த நீதிமன்றத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்த நாட்டு மக்களின் நலனுக்காக, மக்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதற்காக நான் சுயநலமின்றி கடந்த 25 ஆண்டுகளாக உழைத்தேன். வேண்டுமென்றால் என்னை, இயேசு நாதர் சொன்னது போல் என் சதையை உண்ணுங்கள், அல்லது என் இரத்தத்தை அருந்துங்கள். 25 ஆண்டுகளாக நான் இந்த நாட்டுக்காகத்தான் உருகினேன். யாருமே அறியாத ஒரு விஷயம்.
இதையே மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கேட்கப்பட்டிருந்தது. 100 இடங்களில் குண்டு வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தார்கள். நான் 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்த இதை பற்றிக் கூறி வருகிறேன். இந்த மக்களுக்கு மனிதாபிமானம் இல்லையா? என்னைச் சிறையில் அடைத்ததால் இந்தப் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? இதற்குப் பயப்பட வேண்டுமா? உண்மையைப் பேசுவதற்கு எனக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டிருந்தது. ஆகையால் நான் ஆராமைக்கு சென்று தியானம் செய்தேன்.
பொத்த மத தலைவர்களின் அறிவுறுத்தலின்படியே சென்றேனே தவிர, நீதிமன்றத்தை தவிர்ப்பதற்காக அல்ல. என்னை மன்னிக்கவும், எனக்கு வேதனை இருக்கிறது. நானும் ஒரு மனிதன்தான். ஆனால் உண்மையைச் சொல்லியாக வேண்டும். பேசுவதற்கு இடமில்லை. என்றைக்கும் இந்த இதயத்தில் இருக்கக்கூடிய உண்மையைச் சொல்லாமல் இருக்கவும் முடியாது. அதில் எனக்கு மகிழ்ச்சியும் குறைவில்லை, பயமும் இல்லை, கலக்கமும் இல்லை. இந்தத் தெற்கின் இரத்தத்துக்கு எந்த பயமும் கிடையாது. மனிதன் ஒருமுறைதான் மரணிக்கிறான். ஆனால் நாம் சத்தியத்திற்காக உழைக்க வேண்டும் என்றார்.





