போதைப்பொருள் வர்த்தத்தில் ஈட்டப்பட்ட 40 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்
இந்த சொத்துக்கள் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டுள்ளமை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலின் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான 4 சொத்துக்களை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
தங்காலை பகுதியைச் சேர்ந்த இந்திக்க பிரசாத் என்றழைக்கப்படும் 'லாரா' என்பவருக்குச் சொந்தமான சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றுக்கு அமைய, குறித்த நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதன்போது, இந்த சொத்துக்கள் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டுள்ளமை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, திருத்தப்பட்ட பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் 7(1) ஆம் பிரிவின் கீழ் இந்தச் சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி தங்காலை, தங்கெட்டிய பகுதியில் 18 பேர்ச்சஸ் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வீடு, தங்கெட்டிய பகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு காணி மற்றும் அதிலுள்ள கட்டிடம், பொலொன்மாருவ பகுதியில் உள்ள 19.20 பேர்ச்சஸ் காணியும் அதிலுள்ள இரண்டு கட்டிடங்களும், வல்கம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள 37.25 பேர்ச்சஸ் காணி ஆகியனவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய 17-11-2026 அன்று முதல் அமலுக்கு வரும் வகையில், 14 வேலை நாட்களுக்கு இந்தச் சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





